கார்திகேயன் S.சான்-ஹொசே, கலிபோர்னியா
அருள்மொழி சியாட்டில், வாஷிங்டன்
அமெரிக்காவில், ஹிந்து அமெரிக்கன் ஃபவுண்டேசனுக்கும் (HAF) கலிபோர்னிய மாகாணத்தின் சிவில் உரிமை ஆணையத்துக்கும் (CRD) நடந்த வழக்கில், கடந்த ஜூலை 18 அன்று ஒரு முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. உலக அரங்கில் சமூகநீதி சார்ந்த அமைப்புகளால் பரவலாக கவனிக்கப்பட்டுவரும் சாதிப்பாகுபாடு சார்ந்த இவ்வழக்கின் தீர்ப்பானது, அமெரிக்காவில் இந்துத்துவ வல்லாதிக்க சக்திகளின் முடிவுக்கான ஆரம்பமாக அமைகிறது. சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக சட்ட ரீதியான பாதுகாப்பை அடைவதற்கான ஒரு முக்கியப் படிக்கல்லாக அமைவதோடல்லாமல், இத் தீர்ப்பு, இந்துத்துவ வல்லாதிக்க சக்திகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி மத உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

CRD தனது புகாரில், சாதியையும் இந்துமதத்தையும் இணைத்து வழங்கிய குறிப்புகளை நீக்கியபிறகும் – HAF தனது இரண்டாவது திருத்தப்பட்ட புகாரில், சிஸ்கோவிற்கு எதிரான CRDயின் சாதிப்பாகுபாட்டு வழக்கை “அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்றும், இனிமேல் இத்தகைய பணியிடப் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கலிபோர்னிய சிவில் உரிமைத் துறையை அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கோரிக்கையை முரட்டுத் துணிச்சலுடன் பொது நீதிமன்றத்திலேயே வைக்கக் காரணம், தான் சொல்லுவதுதான் இந்து மதம், புலம்பெயர் இந்தியர்களுக்கும் அவர்கள் சமூக வாழ்வுக்கும் தானே அதிகாரி என்கிற ஏகபோக உரிமை தனக்கிருப்பதாக HAF எண்ணுவதாய்க்கூட இருக்கலாம்.

ஜூலை 18: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
ஜூலை 18 அன்று வெளிவந்த இத் தீர்ப்பு, அமெரிக்காவில் வசிக்கும் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை அளிக்கிறது. சாராம்சமாகப் பல நல்ல கருத்துக்களை நிறுவும்போதும், இத்தீர்ப்பு இரண்டு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக அமைகிறது.
- சாதி பாகுபாட்டிற்கு எதிரான CRDயின் இந்த வழக்கு ஒரு முழுமையான சட்டபூர்வமான அரசு நடவடிக்கையாகும் என்பதை நீதிமன்றம் எள்ளளவும் சந்தேகமின்றி நிலைநாட்டியிருக்கிறது. இந்த வழக்கில் சிஸ்கோவை சேர்த்திருப்பது ஒரு நிறுவனமாகவே தவிர, வெறும் ஒரு தனிப்பட்ட (சிஸ்கோ) ஊழியருக்காக அல்ல.
- இரண்டாவதாக, HAF ஒன்றும் அனைத்து இந்துக்களுக்குமான பிரதிநிதி அல்ல என்று சட்டப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாவது: “இந்து அமெரிக்கன் பவுண்டேசன் எவ்வாறு ‘எல்லா இந்து’க்களையும் ஒருங்கிணைக்கும் செயல்களை செய்கிறது என்பதற்கும், அவ்வாறு செய்திருப்பின் அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு மொத்த இந்து அமெரிக்க சமூகத்துடனும் தொடர்புகொள்கிறது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை”
தொடர்புள்ள வழக்குகள்:
தீர்ப்பு வந்துள்ள தற்போதைய வழக்கு (HAF vs CRD) மூன்று குறிப்பிடத்தக்க வழக்குகளுடன் நேரடித் தொடர்புள்ளதாகும். அவையாவன:
- Cisco vs. CRD
- Kumar vs. CSU (California State University),
- Bagal vs. Sawant and City of Seattle
இவ்வழக்கை முழுமையாகப் புரிந்துகொள்ள Cisco vs. CRD வழக்கையும் Kumar vs. CSU வழக்கையும் அதன் கால வரிசையில் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். காலக் கிரமமாகப் பிரித்தால் இதை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
- ஜூன் 2020 முதல் ஆகஸ்டு 2022 வரை
- செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2024 வரை
- ஜனவரி 2024 முதல் இன்றுவரை.
ஜூன் 2020 – ஆகஸ்டு 2022: வழக்கின் ஆரம்பம் கட்ட அடிப்படை சவால்கள்:
ஜூன் 2020: கலிபோர்னியாவின் CRD, ஒரு தலித் ஊழியருக்கு எதிராக சாதிப் பாகுபாடு காட்டியதாக, சிஸ்கோ நிறுவனத்தின் மீது ஒரு தனித்துவம்வாய்ந்த வழக்கை மத்திய ஃபெடரல் நீதிமன்றத்தில் பதிவு செய்தது. கலிபோர்னியாவின் பரந்துபட்ட மாநில சட்ட வரையறைகள் காரணமாக, அது அக்டோபர் 2020 இல் சாண்டா கிளாரா மாகாண உயர் நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு மாற்றப்பட்டது.

நவம்பர் 2020: சிஸ்கோ நிறுவனம் இந்தப் புகாரை நீதிமன்றத்துக்கு வெளியே, பாதிக்கப்பட்டவருடன் நேரடியாக நடுவர்மன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளவும், CRDயை இவ் வழக்கிலிருந்து நீக்கவேண்டும் எனவும் மேல்முறையீடு செய்தது. அதற்கான காரணமாக, இவ்வழக்கு பொதுவெளிக்கு வருமானால் பாதிக்கப்பட்டவர் வேலை செய்த புராஜெக்டுகள் தொடர்பான கம்பெனி ரகசியங்களை வெளியிட வேண்டிவரும். எனவே இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தான் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரியது.
ஜனவரி 2021: ஹிந்து அமெரிக்கன் ஃபவுண்டேசன் (HAF) – சிஸ்கோ வழக்கில் CRDக்கு எதிராளியாக தன்னையும் வழக்கில் இணைத்துக்கொள்ளவேண்டும் எனக் கோரியது. அதற்குக் காரணமாக “இந்துமதத்தை சாதியுடன் இணைத்து வழக்கில் கருதுவதால், அமெரிக்க இந்துக்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதிக்கப்பட்டதாக” கூறியது.
பிப்ரவரி 2021: சிஸ்கோவின் மத்தியஸ்த கோரிக்கையை மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் சிஸ்கோ உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு சென்றது.
ஆகஸ்டு 2022: கிட்டதட்ட 18 மாதங்களுக்குப் பின், உச்ச நீதிமன்றம் சிஸ்கோவின் அப்பீலை மீண்டும் தள்ளுபடி செய்தது. மாகாணத்தின் பொதுவான கொள்கை, வேலை வாய்ப்பு மற்றூம் வீட்டுவசதி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் – மத, இன, பாலின, தேசிய இனம் போன்ற அடிப்படைகளில் பாகுபாடு காட்டப்படாமல் அனைத்து மக்களுக்குமான சமமான உரிமைகளை நிலைநாட்டுவதேயாகும். சிவில் உரிமைத்துறை அதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே, ஒருவர் உரிமை மீறலுக்குள்ளாகும்போது, அதுசார்ந்த வழக்கை அரசுத்துறை எடுத்து நடத்த முற்படும்போது, அந்த அரசுத்துறையை மத்தியஸ்ததுக்கு செல்லவேண்டும் என நிர்பந்திக்க முடியாது. ஏனெனில், அவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை எனவும் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.
வழக்கு நீதிமன்றப் பொதுவெளிக்கு வருமா என முடிவு செய்ய, நீதிமன்றத்துக்கு 18 மாதங்கள் ஆகியிருக்கிறது.
செப்டம்பர் 2022 – ஜனவரி 2024: மத்திய நீதிமன்ற வழக்கு மற்றும் கொள்கைசார் சவால்கள்:
செப்டம்பர் 2022: HAF, CRD மீது மத்திய நீதிமன்றத்தில் மீண்டுமொருமுறை வழக்குத் தொடர்ந்தது. இந்து மதத்துடன் சாதியை இணைப்பது, நிறுவனங்கள் இந்து விண்ணப்பதாரர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டவும் பணியிடங்களில் பதட்டங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று வாதிட்டது. மேலாளர்கள் தெற்காசிய ஊழியர்களிடம் அவர்களின் மத நம்பிக்கைகள் குறித்து சட்டவிரோதமாகக் கேட்கக்கூடும் என்றும், இது அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டத்தின் மத சுதந்திரப் பாதுகாப்புகளை மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
அதே நேரத்தில், அக்டோபர் 2022 இல், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகப் (CSU) பேராசிரியர்கள் – சுனில் குமார் (சான்-டியாகோ)மற்றும் பிரவீன் சின்ஹா (லாங் பீச்) – ஜனவரி 2022 இல் செயல்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் ‘சாதி’யைச் சேர்த்ததற்காக தங்கள் பல்கலைக்கழகத்தின் மீதே வழக்குத் தொடர்ந்தனர்.

கலிபோர்னியா முழுவதும் உள்ள 23 வளாகங்களில், CSU, சுமார் 500,000 மாணவர்களுக்குக் கல்வியளிக்கிறது. 29,000 ஆசிரியர்கள் மற்றும் பிற உறுப்பினர்களைப் பணியமர்த்தியுள்ளது. CSUவின் கொள்கை சாதியை இந்து மதத்துடன் வெளிப்படையாக இணைக்கவில்லை என்றாலும், கொள்கை வடிவமைப்பாளர்கள் சாதி இயல்பாகவே இந்து மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற “அனுமானத்தால்” பாதிக்கப்பட்டுள்ளதாக இப் பேராசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
ஏப்ரல் 2023: கலிபோர்னியா சட்டப்படி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் பாகுபாடு காட்டுதலும் துன்புறுத்தலும் ஒன்றல்ல. வேலைவாய்ப்பு பாகுபாடு நடந்தால் அதற்கு நிறுவனமே பொறுப்பேற்கவேண்டும். துன்புறுத்தல் எனில், தனிப்பட்ட நபர்களும் பொறுப்பேற்கவேண்டும். எனவே, சிஸ்கோ வழக்கில் பாதிக்கப்பட்டவரின் மேலாளர்கள் சுந்தர் மற்றும் ரமணா ஆகியோர் பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதும், அதற்கு நிறுவனமே பொறுப்பேற்கவேண்டும் என்கிற அடிப்படையில் வழக்கிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 2023: நீதிபதி டேல் ட்ரோஸ்ட், CRDக்கு எதிரான HAF இன் வழக்கை நிராகரித்து, “சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுப்பதற்கான முயற்சிகள் இந்து தொழிலாளர்களின் உரிமைகளை மீறவில்லை” என்று தீர்ப்பளித்தார். சாதிப்பாகுபடு குறித்தான சட்ட அமலாக்கம் பணியிடங்களில் உரிமைகளை மீறும் வகையிலான மதரீதியான கேள்விகளுக்கு வழிவகுக்கும் என்ற HAF இன் வாதம் நம்பமுடியாததாகவும் ஊகத்தினடிப்படையில் இருக்கிறது எனவும் அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தனிமனிதரின் உரிமை சார்ந்த வாதங்களை, HAF ஒரு அமைப்பாக முன்வைக்க முடியாது எனவும் தள்ளுபடி செய்தது
உடனடியாக, HAF, மேலும் எட்டு தனிப்பட்ட நபர்களை சேர்த்து ஒரு திருத்தப்பட்ட புகாரை CRD மீது பதிவு செய்தது. அந்த எட்டுபேரில் சிஸ்கோ வழக்கில் குற்றமிழைத்திருந்தபோதும் தள்ளுபடி செய்யப்பட்ட சுந்தர் மற்றும் ரமணாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய ‘சிலவகையான’ பணியிடப் பாகுபாடுகளை CRD விசாரிப்பதே அரசியலமைப்பை மீறுவதாகும் என்கிற அயோகியத்தனமான வாதத்தையும் அத் திருத்தத்தில் சேர்த்தது.
நவம்பர் 2023: குமார் vs CSU வழக்கை ஃபெடரல் நீதிபதி கேரி கிளாஸ்னர் தள்ளுபடி செய்தார். பல்கலைகழகம், தனது கொள்கையில் ‘சாதி’ என்பதற்குப் பதிலாக ‘வர்க்கம்’ பயன்படுத்த வேண்டும் என்று அப்பேராசிரியர்கள் வாதிட்டனர். அதற்கான காரணங்களாக அவர்கள் முன்வைத்தது HAF இன் அதே வாதங்கள் தான். இந்த வழக்கிலும், “சாதி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது எவ்விதத்தைலும் மதவிரோதமானது அல்ல எனத் தீர்ப்பளித்தார். ஏனெனில் சாதியை இந்து மதத்தைக் குறிப்பிடாமலும் வரையறுக்க முடியும். CSUவின் சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான கொள்கை, இந்து மதத்தை சாதியின் அடிப்படையில் வரையறுக்கவோ அல்லது இந்துமதத்தை ஏற்கவோ மறுக்கவோ முயற்சிக்கவில்லை என்பதையும் அவர் அத்தீர்ப்பில் தெளிவுறத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2023: CRD – பணியிடத்தில் நடக்கும் பாகுபாடுகளைக் களைவதுதான் தன் வேலையே தவிர, மதக் கட்டமைப்புகள் மூலமாக சாதியை விளக்குவது தங்கள் வேலை அல்ல என்று தீர்மானித்து, Ciscoவுக்கு எதிரான தன் புகாரிலிருந்து சாதியையும் இந்து மதத்தையும் இணைக்கும் குறிப்புகளை நீக்கியது.
ஜனவரி 2024: மாநில நீதிமன்றம் Cisco vs CRD வழக்கில் தன்னையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என HAF பதிவு செய்த கோரிக்கையை நிராகரித்தது. சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது இந்து மத நடைமுறைக்கு தடையாகவோ சுமையாகவோ இருக்காது என்று தீர்ப்பளித்தது. CRD-யின் பணியிட சமத்துவத்தை நிலைநாட்டும் நடவடிக்கையை, இந்து மதத்தை வரையறுப்பதாக HAF தவறாக வகைப்படுத்தியதாக நீதிமன்றம் அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அவ்வாறாக சட்டப்பூர்வ மனுக்களில் தவறான முறையில் ஒரு மதத்தை வரையறுத்திருந்தால் கூட, அது மத நடைமுறைகளை சட்டவிரோதமாக கட்டுப்படுத்துவதாக ஆகாது என்பதையும் குறிப்பிட்டது.

ஜனவரி 2024 முதல் இன்றுவரை: கண்டறிந்த உண்மைகளும் இறுதி முடிவும்:
பணியிட அமைப்புகளில் நடைபெறும் கலந்துரையாடல்கள் வெளிப்பார்வைக்குக் கலாச்சாரம், திருவிழாக்கள், திரைப்படங்கள், தேசிய கொள்கை மற்றும் நடப்பு விவகாரங்களை அலசுவது போலத் தோன்றலாம் ஆனால் கவனமாகப்கவனமாகப் பார்த்தால், அவை பெரும்பாலும் சாதியின் கூறுகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். இத்தகைய விவாதங்கள் தன்னியல்பாக சாதிப்பாகுபாட்டைக் கொண்டதாக இல்லாவிட்டாலும், அதே இடத்திலிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நபர்களுக்குள் பணியிட நச்சு உளவியலையும் பகையுணர்ச்சியையும் விதைக்கும் சூழல்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. சில நேரங்களில் இத்தகைய உரையாடல்கள் சாதியச்சூழலை கட்டமைப்பதாகக்கூட அமைந்துவிடுகிறது
சாதியின் இயக்கவியலை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில், முதன்முறையாக கலிபோர்னிய சிவில் உரிமைத்துறை, ‘தலித்,’ ‘பிராமணர்’ மற்றும் ‘தீண்டத்தகாதவர்’ போன்ற குறிப்பிட்ட சாதி தொடர்பான சொற்களைக் கொண்ட அனைத்து ஆவணங்களையும் சிஸ்கோ சமர்ப்பிக்கவேண்டும் எனக் கோரியது. இது Cisco நிறுவனத்திற்குள் சாதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் தேவையான அம்சம் எனவும் நிறுவியது. 21 சொற்களைக்கொண்ட கோரிக்கையின்படி 348,000 ஆவணங்கள் வருவதாகவும், அவற்றை வெளியிடுவதற்கு முன்பு மதிப்பாய்வு செய்ய $1.45 மில்லியன் செலவாகும் என்று Cisco கூறியது.
நவம்பர் 2024 இல், நீதிமன்றம் தேடலைக் குறிப்பிட்ட சொற்களுக்கு சுருக்கி, அந்த ஆவணங்களைப் பகிர சிஸ்கோவுக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு சிஸ்கோ வழக்கை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இது பணியிடங்களில் சாதிப் பாகுபாட்டை எதிர்க்கும் வலுவான கொள்கைகளை வகுக்க நிறுவனங்களை ஊக்குவிக்கக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.

மார்ச் 2025 இல், குமார் vs CSU வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அத்தீர்ப்பில், “CSUவின் சாதி சார்ந்த கொள்கை இந்து மதத்திற்கு எதிரான எந்தப் பகைமையும் காட்டவில்லை. அது எந்தவகையிலும் மதத்தைக் களங்கப்படுத்துவதாக இல்லை – எனவே, மேல்முறையீட்டாளர்களுக்கு எந்தவித ஆன்மீகரீதியான “புண்படுத்துதுதலும்” நடக்கவில்லை” எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 18: திருப்புமுனை
ஜூலை 18, 2025 அன்று, மிகநீண்டகாலமாக நடைபெற்றுவரும் இவ்வழக்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்று வழங்கப்பட்டது. HAF இன் லட்சியத் திட்டமான “சாதி பாகுபாட்டு வழக்குகளில் அரசின் தலையீட்டைத் தடுக்கவேண்டும்” என்னும் முயற்சி சட்டத்தால் தீர்க்கமாக முறியடிக்கப்பட்டது. சாதிப் பாகுபாடு வழக்குகளில், தனிநபர்கள் அரசின் பிரதிநிதித்துவம் இல்லாமல், நிறுவனங்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று HAF வாதிட்ட அணுகுமுறை நடைமுறையில் சாத்தியமற்றது.
மத சுதந்திரத்தை ஆதரிப்பதான போர்வையில் வைக்கப்படும் HAFஇன் இந்த வாதம் ஒடுக்கப்பட்ட சாதியினரை நேரடியாகப் பாதிக்கக்கூடியதாகவும், அவர்களை முற்றிலும் பாதுகாப்பற்ற நிலைக்கும் ஆளாக்கும். பெருநிறுவனததையும் அதில் உயரதிகாரிகளை எதிர்த்துப் போராடவேண்டியிருப்பது மட்டுமல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அரசாலும் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுவார்கள். HAFஇன் நோக்கமும் அதுதான்.
பல சிஸ்கோ ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிவில் உரிமைத்துறை தெளிவாக அமைப்புரீதியான நிவாரணம் கோரியுள்ளது என்பதை நீதிபதி டேல் ட்ரோஸ்ட் உறுதிப்படுத்தினார். இது நிறுவனம் மாநில சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்பதை நிரந்தர நீதிமன்ற உத்தரவு மூலமாக உறுதி செய்கிறது. மாநில அரசின் துறைரீதியான நடவடிக்கையை, “புகார்தாரரின் தனிப்பட்ட வழக்கறிஞராக” துறை செயல்படுவதாக சிறுமைப்படுத்தி சித்தரிக்கும் HAF இன் வாதம் முற்றிலும் தவறானது என அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இவ் வழக்கில் மேலும் இதற்கு மேலும் திருத்தங்கள் செய்வது பயனற்றது எனவும், இனிமேல் புகாரில் திருத்தங்களை அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எனவே, HAFக்கு உச்ச நீதிமன்றத்தை மறுஆய்வுக்காக அணுகுவது மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. பொதுவாக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு அளிக்கப்படும் மனுக்களில் 2% மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சாரமற்ற இந்த வழக்கு உடனே உச்ச நீதிமன்றத்தால் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட, அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒன்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லையே?
நம்பிக்கையூட்டும் எதிர்காலமும், அணிதிரள்வதன் அவசியமும்:
இந்தத் தீர்ப்பு சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மட்டுமல்ல, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களை ஆதரிக்கும் சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள பொதுவான இந்து மக்களைத் திரட்ட முற்படும் சாதி-எதிர்ப்பு கொள்கையுடையோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது.
சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் கணக்கெடுப்பு, “இந்திய அமெரிக்கர்களின் வாழ்வு மற்றும் அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 2024இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள், 77% இந்திய அமெரிக்கர்கள் ‘ஒரு தனிநபரின் சாதி அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளை’ ஆதரிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் இந்த இந்தியப் பெரும்பான்மையினரின் குரலையே பிரதிபலிக்கிறது.
எனவே, இந்த ஜூலை 18 தீர்ப்பு, அமெரிக்காவில் இந்து மேலாதிக்கவாதிகளின் செல்வாக்கிற்கான முடிவைத் தொடங்கிவைத்துள்ளது. இருப்பினும் இந்த மாற்றம் தானாக நிகழ்ந்துவிடாது. அமெரிக்காவில் இந்து மேலாதிக்கத்தின் அழிவை உறுதி செய்ய சாதி எதிர்ப்பு மற்றும் ஜனநாயக ஆதரவு சக்திகள் ஒன்றுபட வேண்டும். இந்த இலக்கை நோக்கி, சாதி எதிர்ப்புத்தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கிவரும் அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் ஆகஸ்ட் 9 அன்று சான்-ஹொசேயில் இவ்வழக்கையும் அதன் தீர்ப்பின் முக்கியத்துவத்தையும் விவரிக்கும் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது. மதத்தின் பெயரால் இந்துக்களையும் இந்தியர்களையும் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையைப் பேணுவது குறித்து, சாதியை எதிர்க்கும் இந்தியர்களுக்குக் இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், , ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கவும் இது பயனுள்ளதாக அமையும்.
இதே வழக்கில் சில் மாதங்களுக்கு முன் ஒரு வழக்கு நடைமுறை சார்ந்த தவறுதலுக்காக சிறு தொகை அபராதம் விதிக்கப்பட்டதையும், சுந்தரும் ரமணாவும் Cisco வழக்கில் தொடர்புடையவர்களாக இருந்தபோதும், அமைப்பு ரீதியான சட்டவிதிகளுக்காக விடுவிக்கப்பட்டதையும் – பெரிய வெற்றியாக சித்தரித்த இந்திய ஊடகங்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப்பற்றி வாயே திறக்கவில்லை. சிஸ்கோ வழக்கை பலவிதமாகத் தொல்லை செய்துவந்த HAF அதன் அனைத்து வாதங்களிலும் மண்ணைக்கவ்வியதை இவர்கள் கண்டும் காணாமல் கடந்து செல்வது, அவை யாருடைய குரலாக செயல்படுகின்றன என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. சில முன்னணிப் பத்திரிகைகள் இந்தியப் பத்திரிகை அறக்கட்டளை (PTI) போடும் செய்திகளை மட்டுமே நாங்கள் கணக்கிலெடுத்துக்கொள்வோம் என்னும் போர்வையில் ஒளிந்துகொள்வதும், பிடிஐ, இத்தகைய உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் – இந்தியப் பொது ஊடகங்கள் இன்னும் யாருடைய பிடியில் இருக்கின்றன என்பதை மீண்டுமொருமுறை உறுதிசெய்கின்றன.
கட்டுரையாளர் குறிப்பு:

S. கார்த்திகேயன், கலிஃபோர்னியாவில் உள்ள அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்கிள் (AKSC) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார்.