குறைந்தபட்ச இருப்பு தொகையை 50 ஆயிரமாக உயர்த்தியதை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்தன. அதன் எதிரொலியாக அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன் மினிமம் பேலன்ஸ் தொகையை பெருமளவில் குறைத்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியாக ஐசிஐசிஐ வங்கி உள்ளது. சமீபத்தில், தங்களது வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
அதில், பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக சேமிக்குகணக்கு தொடங்கினால் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயையும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயையும் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக வைத்திருக்க வேண்டும்.
இருப்புத்தொகை குறைவாக உள்ளவர்களுக்கு 6 சதவீதம் அல்லது 500 ரூபாய், இதில் எது குறைவாக இருக்கிறதோ அது அபராதமாக வசூலிக்கப்படும்.
இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும், அப்போதிலிருந்து தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அறிவித்திருந்தது.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள அதன் வாடிக்கையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் மற்ற வங்கிகள் மற்றும் பொதுநல அமைப்புகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான பொதுநல அமைப்பு மத்திய நிதியமைச்சகத்திற்கு எழுதிய கடிததத்தில், ”ஐசிஐசிஐ வங்கி இப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகையை உயர்த்தியது மத்திய அரசின் ’அனைவருக்கும் வங்கி சேவை’ நோக்கத்திற்கு எதிரானது. இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும், வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஐசிஐசிஐ வங்கி அதன் முந்தைய அறிவிப்பை அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளது.
மேலும் இன்று புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய் என்பதை 15 ஆயிரமாக குறைத்துள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய நிலையில், தற்போது 7500 ரூபாயாக குறைத்துள்ளது.
கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் பழைய வாடிக்கையாளர்களை போலவே 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.