ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணி 298 ரன்கள் குவித்து அசத்தல்!

Published On:

| By Mathi

ICC World up India SA

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் (ICC Women’s World Cup Final) இன்று (நவம்பர் 2) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்கள் குவித்துள்ளது.

நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பேட்டிங் வெளிப்பட்டது.

ADVERTISEMENT

மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 104 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

ADVERTISEMENT

ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

தொடர்ந்து விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் அவர் குவித்த ரன்கள் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜ் குவித்த 409 ரன்கள்தான் சாதனையாக இருந்தது; தற்போது ஸ்மிருதி மந்தனா, 434 ரன்கள் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ADVERTISEMENT

செமிஃபைனலில் சதம் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்களும் எடுத்தனர்.

மறுபுறம், தீப்தி ஷர்மா 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 3 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ரிக்சா கோஷ், 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்து, இந்திய அணியின் ஸ்கோரை 300-ஐ நெருங்க உதவியாக இருந்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

299 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, தனது முதல் உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இது, மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பதிவான இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட இந்திய அணிக்கு, இந்த முறை கோப்பையை வெல்ல பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share