அபுதாபி மற்றும் துபாயில் நடந்து வரும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று என இரண்டு முறையும் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்தது. இந்த நிலையில் இரு அணிகளும் ஆசியக் கோப்பைத் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளன.
இதற்கிடையே நடத்தை விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் ஐசிசியால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி துபாயில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் விபத்தில் சிக்கிய போர் விமானத்தை போன்று நடித்ததற்காக வேகப்பந்து வீச்சாளர் ரவூஃப்புக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போட்டியில் தனது அரை சதத்தைக் கொண்டாட பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரரான ஃபர்ஹான் (58 ரன்கள்) தனது மட்டையை துப்பாக்கியைப் போல காட்டியதை ஐசிசி கண்டித்துள்ளது. அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

அதே போன்று செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த லீக் போட்டிக்குப் பிறகு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசியதற்காக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐ.சி.சி.

அதே வேளையில் மூன்று வீரர்களிடமும் மைதானத்தில் இனி எந்தவொரு அரசியல் அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் இத்தொடரில் மூன்றாவது முறையாக மோத உள்ளன.