“தமிழர் திருநாளாம் பொங்கல் அன்னைக்கு யாராவது எக்ஸாம் வைப்பாங்களா? ஊரே கொண்டாடிட்டு இருக்கும்போது நாங்க மட்டும் பரீட்சை எழுதணுமா?”
என்று தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி மாதம் நடைபெறவிருந்த சிஏ (CA) தேர்வின் தேதி மாற்றப்பட்டுள்ளது!
மாற்றப்பட்ட தேதி விபரம்:
சிஏ இன்டர்மீடியட் (CA Intermediate) பிரிவிற்கான குரூப்-2 தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பழைய தேதி: ஜனவரி 15, 2026 (வியாழக்கிழமை) – தைப்பொங்கல் திருநாள்.
- புதிய தேதி: ஜனவரி 19, 2026 (திங்கட்கிழமை).
- நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.
எந்தப் பாடம்?
ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த ‘ஆடிட்டிங் மற்றும் எத்திக்ஸ்’ (Auditing and Ethics) என்ற தாள் (Paper 5) மட்டுமே தேதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை, அவை திட்டமிட்டபடி நடைபெறும்.
காரணம் என்ன?
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாலும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காரணமாகவும் மாணவர்கள் தேர்வெழுதச் சிரமப்படுவார்கள் என்ற கோரிக்கை எழுந்தது. இதையேற்ற ICAI நிர்வாகம், மாணவர்களின் நலன் கருதித் தேதியை ஒத்திவைத்துள்ளது.
ஹால் டிக்கெட் அப்டேட்:
“தேதி மாறிடுச்சே… புதுசா ஹால் டிக்கெட் டவுன்லோட் பண்ணணுமா?” என்று பதற வேண்டாம். ஏற்கெனவே உங்களுக்கு வழங்கப்பட்ட அட்மிட் கார்டு (Admit Card) புதிய தேதிக்கும் செல்லுபடியாகும். தனியாகப் புதிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.
சிஏ படிக்கிற பசங்க எப்பவுமே படிப்பு, படிப்புனுதான் இருப்பாங்க. ஆனா பொங்கல் அன்னைக்குக் கூடவா? நல்லவேளை தேதி மாத்திட்டாங்க. இந்த 4 நாள் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சிருக்குனு நினைச்சுக்கோங்க. ‘ஆடிட்டிங்’ பேப்பர் கொஞ்சம் தியரி அதிகம் உள்ள சப்ஜெக்ட். இந்த விடுமுறையை யூஸ் பண்ணி இன்னும் நல்லா ரிவைஸ் பண்ணுங்க.
ஜனவரி 15 லீவ் கிடைச்சிருச்சுனு ஜாலியா ஊர் சுத்தாம, 19ஆம் தேதி எக்ஸாமுக்குத் தயாராகுங்க. இந்தத் தேதி மாற்றம் சிஏ இன்டர்மீடியட் மாணவர்களுக்கு மட்டும்தான், ஃபவுண்டேஷன் (Foundation) மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 12, 16, 18, 20 தேதிகளில் தேர்வுகள் நடக்கும்!
