வேளாண் துறை இயக்குநர் முருகேஷ் ஐ.ஏ.எஸ், வீடியோ கான்பரன்ஸில் இணை இயக்குநர்களிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் துறை இயக்குநர் முருகேஷ் ஐ.ஏ.எஸ்-ன் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்கள், பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம் போன்ற தகவல்களை, ‘டிஜிட்டல் (DCS)’ முறையில் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் வருவாய்த் துறையிடமிருந்து வேளாண் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை இயக்குநர் முருகேஷ் ஐஏஎஸ் சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் ஜேடி(இணை இயக்குநர்), டிடி (துணை இயக்குநர்கள்) ஏடி(உதவி இயக்குநர்கள்), ஏஓ(வேளாண் அதிகாரி), ஏஏஓ(உதவி வேளாண் அதிகாரி) ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இணை இயக்குநர்களான ஜேடி-க்களிடம் கடுமையாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
என்ன பேசினார்?
அந்த வீடியோவில், “எல்லோரும் மேப் பன்னிருக்கீங்கல… எனக்கு நம்பர் வந்திருக்கணும் அவ்வளவுதான். அதை பண்ணலனா அந்த பிளாக்கில் இருக்கிற ஏடிஏஎஸ், ஏஎஸ்ஓ என யார் ஒழுங்காக வேலை செய்யவில்லையோ அவர்கள் மீது சார்ஜ் போட்டு எனக்கு அனுப்புங்கள். ஜேடி-க்களுக்கு (இணை இயக்குநர்) இதுதான் கடைசி எச்சரிக்கை…
உங்களால் முடியவில்லை என்றால், சொல்லி விடுங்கள். ஜேடி பொறுப்பில் இருந்து வெளியே வந்து விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஜேடி-க்களும் 25,000 எண்ட்ரிகளை காட்ட வேண்டும். வெறும் 2000, 3000 என காட்டிக்கொண்டு என் முன்னாடி வந்து நிக்காதீங்க சொல்லிட்டேன். நீங்கள் என்ன வேலை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். (அப்போது ஜேடிஏ ஒருவர் ஹெவி ரெயின் என்று சொல்ல)
என்னங்க ஹெவி ரெயினு… போன மாசம் மழையில் தானே டிசிஎஸ் செய்தோம். இப்போது மழை பெய்கிறது என லொட்டு, லொசுக்கு என்று நொண்டி சாக்கு சொல்கிறீர்கள்.
திரும்ப திரும்ப சொல்றேன், பன்றி மாதிரி நாட்களை திண்று கொண்டிருக்கிறீர்கள். நொண்டி சாக்கு சொல்லி உயிரை வாங்குறீங்க… எந்தெந்த வேளாண் உதவி அலுவலர்கள் பணி செய்வதில்லையோ, அவர்களுக்கு, ’17 பி மெமோ’ கொடுங்கள். அடுத்த முறை ஆய்வு கூட்டத்திற்கு வரும் முன், விபரங்களை இ – மெயிலில் அனுப்பி விட்டு வந்து உட்காருங்கள்” என்று பல்லை கடித்துக் கொண்டு கடிந்து கொள்கிறார்.
ஒரு பக்கம் வேலை செய்யவில்லை என்பதற்குதானே ஐஏஎஸ் அதிகாரி திட்டுகிறார் என்று அவருக்கு ஆதரவாகவும், அதற்காக இப்படியா திட்டுவது என எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
இந்த நிலையில் வேளாண் துறை இயக்குநர் முருகேஷ் ஐஏஎஸ்-க்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்து இன்று (ஆகஸ்ட் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “ அரசின் நம்பிக்கை வாக்குறுதிகளுக்கும், அரசு நிர்வாகங்களின் அணுகுமுறைக்கும் முற்றிலும் முரண்பாடு உள்ளது. குறிப்பாக பல்வேறு துறை நிர்வாகங்களில், இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அதிகாரிகளின் ஆணவப் போக்கு, ஊழியர் விரோத நடவடிக்கைகள், சங்கங்களின் கருத்துக்களை கூட கேட்க மறுக்கும் அதிகாரிகள், மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் என எல்லாவித அதிகார துஷ்பிரயோகமும் நடைபெற்று வருகிறது. இதனால் மறைமுகமாக இந்த அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி வருகிறது. இது அரசுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் மௌனம் சாதிக்கிறதா? என்பதே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கேள்வியாக உள்ளது.
ஏனென்றால், வேளாண்மைத்துறை இயக்குனர் முருகேஷ் ஐஏஎஸ், இணைய வழி ஆய்வுக் கூட்டத்தில் அதிகார தோரணையுடன், ஆணவமாக, அநாகரிகமாக இதுவரை எந்தவொரு அதிகாரியும் பேசாத வகையில் பேசி உள்ளதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
“முட்டாள் மாதிரி பேசாதீங்க, நாவை மடித்து பற்களைக் கடித்துக் கொண்டு, மழை, கிழைன்னு லொட்டு, லொசுக்குன்னு, You are Eating days, நாட்களை திண்ணுக்கிட்டு இருக்கீங்க பன்றி மாதிரி… “என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
இதுதான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்களிடம் பணியாற்றும் இணை இயக்குனர் போன்ற அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தும் முறையா? இனி இந்த அதிகாரிகள் தங்களிடம் பணியாற்றும் அலுவலர்களிடம் பணி நிமித்தமாக எவ்வாறு அணுக முடியும்?.
தமிழக முதல்வர் மக்களிடம் கனிவாகப் பேசி, கோரிக்கைகளை பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசின் பார்வையில் அரசு ஊழியர்கள் மக்கள் இல்லையா? இவ்வாறு பல துறைகளில் அதிகாரிகள் செயல்படுவதால்தான் ஆய்வுக் கூட்டங்ளில் அலுவலர்கள் மயங்கி விழுந்து இறப்பதும், அலுவலக வளாகத்தில் தூக்கு மாட்டி இறப்பதும், இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.
அரசுத் துறையில் சுமார் 5,00,000 காலிப் பணியிடங்கள் இருந்தாலும், அத்தனை பணிப் பளுவையும் சொற்ப எண்ணிக்கையில் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்தான் சுமக்கின்றனர். அவர்கள்தான் இரவு பகலாக பணியாற்றி அரசு அன்றாடம் வெளியிடும் புதுப்புது அறிவிப்புகள், அறிமுகப்படுத்தும் புதுப்புது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் பணியை செய்து வருகிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் பரிசு அநாகரீகமான வார்த்தைகள், ஆபாசப் பேச்சுக்கள், ஊதிய பிடித்தங்கள். இதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. அரசு ஊழியர்களின் உரிமைகள் நசுக்கப்படும் விதமாக யார் செயல்பட்டாலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டக்களம் காணும். அரசு ஊழியர்களின் ஊதியத்தை, உரிமைகளைப் பாதுகாத்திட ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
எனவே, தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு ஊழியர் விரோத நடவடிக்கைகளை களைந்திட வேண்டும். அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் போராட்டக் குழுக் கூட்டத்தை கூட்டி துறை அதிகாரிகளின் ஊழியர் விரோதப் போக்கிற்கு எதிராகவும், அதை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து சமரசமற்ற முறையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கிறோம்.
உங்களால் நான், உங்களுக்காக நான் என்பதை அரசு செயல்பாட்டிலும் பின்பற்றும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எதிர்பார்க்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை சொல்வது என்ன?

இந்த வீடியோ பற்றி வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அலுவலகத்தில் விசாரித்தோம்
“வேளாண் துறை பணிகளுக்கு உதவுவதற்காகவும் வேகப்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தன்னார்வர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த கிராமத்தில் சர்வே எண் அதிகமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று பேர் கூட நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ஒரு சர்வே நம்பரை அப்டேட் செய்தால் 19 ரூபாய் கிடைக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 சர்வே நம்பர் அப்டேட் செய்யலாம். அப்படியானால் அவர்களுக்கு தினக்கூலியாக 950 ரூபாய் கிடைக்கும்.
ஒரு ஒன்றியத்துக்கு குறைந்தபட்சம் 3000 சர்வே நம்பரை அப்டேட் செய்யலாம். ஒரு மாவட்டத்துக்கு 4 ஒன்றியத்தில் இருந்து 16 ஒன்றியம் வரை உள்ளது. அப்படியென்றால் எளிதாக 20000 சர்வே நம்பர்களை அப்டேட் செய்யலாம்.
ஆனால் ஜேடிக்கள் தன்னார்வலர்களை நியமிக்காத காரணத்தால் தான் இந்த தாமதத்துக்கு காரணம். இருந்தாலும் இயக்குநர், இணை இயக்குநர்களை இப்படி பேசியிருக்கக்கூடாது.
இந்த தகவல் தெரிந்ததும் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் இயக்குநர் முருகேஷிடம் பேசியிருக்கிறார். அப்போது முருகேஷ் ஐஏஎஸ், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து, இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரை தொடர்ந்து வேளாண் துறை செயலாளர் தட்சிணாமூர்த்தியும் பேசியிருக்கிறார். “சாதாரணமாக பேசும்போதே ரெக்கார்டு செய்கிறார்கள். வீடியோ கால் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பொதுவெளியில் நாம் வேலை பார்ப்பது தெரியாது. இதுபோன்று ஏதாவது நடந்துவிட்டால் மட்டும் வேகமாக வெளிவந்துவிடும் கவனமாக இருங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்”என்கிறார்கள்.
அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கமும் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆபேல் மூர்த்தி, “முதல்வர் ஸ்டாலின் காலையில் எழுந்தால் யார் என்ன பேச போகிறார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பயத்தை நியாயப்படுத்தும் வகையில், வேளாண் துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி, இப்படி பேசலாமா? இது நாகரிகமற்ற செயல். அவர் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அவருடைய துறை மாற்றப்பட வேண்டும். விவசாயிகள் முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.