சுமார் 11 மணி நேரமாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (ஆகஸ்ட் 16) அமலாக்கத்துறை நடத்திய சோதனை மாலையில் நிறைவடைந்தது. இதனையடுத்து ED அதிகாரிகளுடன் கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அமைச்சர் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக எழுந்த புகார் எதிரொலியாக திண்டுக்கல்லில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அதே போன்று சீலப்பாடியில் உள்ள அவருடைய மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் வள்ளலார் நகரில் உள்ள மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது.
இதுதவிர சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லம், சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் இருக்கும் ஐ.பி. செந்தில்குமார் அறை மற்றும் அவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஐ.பெரியசாமி இல்லத்தில் சுமார் 11 மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் முடிவில், எடுக்கப்பட்ட ஆவணங்களை பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்குவதற்காக வீட்டிற்குள் ஜெராக்ஸ் மெஷின் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு சூட்கேஷில் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, அங்கிருந்து புறப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் கைக்குலுக்கி, சிரித்த முகத்துடன் அமைச்சர் ஐ.பெரியசாமி வழியனுப்பி வைத்தார். இதனைக் கண்ட அங்கிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் நூற்பாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.