ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று (டிசம்பர் 26) மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார். இதையொட்டி இனி சினிமாவில் நடிக்கமாட்டேன், ஜனநாயகன் தான் எனது கடைசி படம் என்று அறிவித்தார் விஜய்.
இந்தசூழலில் ஹெச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி மலேசியாவில் உள்ள புக்கிட் ஜாலில் தேசிய ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா ’தளபதி திருவிழா’ என்ற பெயரில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 80,000 பேர் பங்கேற்பார்கள் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் மலேசியாவுக்கு இன்று காலை விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார். விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் அவருடன் சென்றுள்ளனர்.
விஜய்யை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ், நடிகை பூஜா ஹெக்டே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் மலேசியா சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளார் அனிருத், ’இந்த நிகழ்ச்சிக்கு செல்வது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 80000 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். இது விஜய்யுடன் எனக்கு One Last Chance தான்.எங்கள் காம்பினேஷனில் வந்த அனைத்து பாடல்களும் ஹிட்தான்’ என கூறினார்.
