மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்று பைபிள் கதையை சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (டிசம்பர் 12) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், “அன்பான தருணம்…அன்பும் கருணையும்தான் அனைத்துக்கும் அடிப்படை. இவை இரண்டும் இருப்பதுதான் தாய் மனசு.
நமது தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண் தானே…தாய் அன்பு கொண்ட மண் தானே. தாய்க்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்றுதானே.
பொங்கல், தீபாவளி, ரம்ஜான் , கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையையும் பகிர்ந்து கொள்வதுதான் நமது ஊர்.
வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் நாம் எல்லோருமே சகோதரர்கள்தான்.
அதனால்தான், நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும்.
மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும் அனைத்து பிரச்னையையும் வென்றுவிடலாம்.
நம்பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்று, ஒரு இளைஞருக்கு எதிராக அவரது சகோதரர்கள் அவரை கிணற்றில் தள்ளிவிட்டார்கள். அதிலிருந்து மீண்டு வந்த இளைஞர் அந்த நாட்டுக்கே அரசராகி, துரோகம் செய்த சகோதரர் மட்டுமல்ல அந்நாட்டையே காப்பாற்றுகிறார்.
இந்த கதையை யாரை குறிக்கிறது என்பது நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடவுளுடைய அருளும், மக்களை நேசிக்கிற அன்பும், வலிமையும், உழைப்பும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட போராட்டத்தையும் எதிரிகளையும் ஜெயிக்கலாம் என்பதை இந்த கதைகள் நம்மை உணர்த்துகிறது.
ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது. அதற்காகதான் நமது கொள்கைக்கு மதசார்பற்ற சமூக நீதி கொள்கை என பெயர் வைக்கப்பட்டது.
கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே” என்று கூறினார்.
