ADVERTISEMENT

டிடிவி தினகரனை சந்தித்தேனா? செங்கோட்டையன் பதில்!

Published On:

| By christopher

i am not meeting with ttv dhinakaran: sengottaiyan

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நான் இன்று (செப்டம்பர் 24) சந்திக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதற்கிடையே அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 5ஆம் தேதி ‘அதிமுக ஒருங்கிணைப்பு’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதனையடுத்து அவரது கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி.

அதோடு “கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களையும், ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?” என்று கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை வடபழனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அதோடு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க தனக்கு விருப்பமில்லை என்பதையும் மறைமுகமாக தெரிவித்தார். செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் அதனை உறுதிப்பட தெரிவித்ததாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில் டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா போட்ட ‘ஆட்டோ பாம்’! இபிஎஸ் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்ததன் பரபர பின்னணி அவுட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையே கோபிச்செட்டிபாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தார் செங்கோட்டையன்.

ADVERTISEMENT

மேலும் இன்று திடீரென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ”எனது சொந்த வேலையாகவே சென்னைக்கு வந்தேன். நான் யாரையும் பார்க்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தவிர வேறு எதையும் செய்யவில்லை; நல்லதே நடக்க வேண்டும் என்பதே என் நோக்கம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share