தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எரிசக்தி சேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிலிண்டர் தட்டுப்பாடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ தட்டுப்பாடு எல்லாம் எங்கும் கிடையாது. நானும் கேஸ் டீலர்தான். உங்களுக்கு எங்கு சிலிண்டர் வேண்டுமோ நான் 20 நாட்களில் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளை குறைத்ததற்கும் சிலிண்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க் கட்சிகாரர்கள் எழுதி போட்டிருப்பார்கள்.
ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு மீண்டும் புக் செய்ய 20 நாட்கள் ஆகும் என்ற சர்வர் முறையாலேயே தாமதம் ஏற்படுகிறதே தவிர, தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடுகள் எங்குமே இல்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ, அங்கு கேஸ் சிலிண்டர்களை தர சொல்கிறேன்” என்றார்.
