கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையில், பட்டப்பகலில் மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பொள்ளாச்சி மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக குழந்தைகளுடன் ஏபிடி ரோடு பழனியப்பா வீதியில் ஸ்வேதா வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாரதி, ஸ்வேதாவை கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பாரதியை அப்பகுதி மக்கள் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாரதியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.