பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடிகை ஹுமா குரேஷியின் நெருங்கிய உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் வலிமை படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.
இவரது நெருங்கிய உறவினர் ஆசிப் குரேஷி (42). இவர் டெல்லியில் கோழி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் நேற்று இரவு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தனது வீட்டு கதவு முன்பு, இரு சக்கர வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்று ஒருவரிடம் கூறியுள்ளார்.
அப்போது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் ஆசிப்பை, இரண்டு பேர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஆசிஃபின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் பிஎன்எஸ் பிரிவு 103(1) மற்றும் 3(5) இன் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
இதில் கொலையில் ஈடுபட்ட உஜ்வால் (19) மற்றும் கௌதம் (18) என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் ஆசிஃப்பின் வீட்டிற்கு சில மீட்டர் தொலைவில் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஹுமா குரேஷியின் தந்தையும் ஆசிஃபின் மாமாவுமான சலீம் குரேஷி கூறுகையில், “இரண்டு பேர் வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தினர். ஆசிப் அவர்களிடம் அதை ஓரமாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதனால் வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. சிறுது நேரத்தில் அவர்கள், என் மருமகனைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொன்றனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.