கோடைக் காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

How to prevent dehydration in summer super tips

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து இழப்பினால் ஏற்படும் பிரச்சனைகள், நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்வது (Summer Tips) என்பது பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே வெயில் காரணமாக வெளியே சென்றால் அதிகப்படியான வியர்வை சுரக்கிறது.

ADVERTISEMENT

அதிகப்படியான வெயில் நீர்சத்து இழப்பை ஏற்படுத்தி உடல்நலக் கோளாறுகளுக்கு வழி வகுக்கிறது. கோடைக் காலத்தில் உடலில் நீர்ச்சத்தைப் பேணுவது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக வயல் வேலைக்கு செல்பவர்கள், களத்தில் வேலை செய்பவர்கள் அல்லது வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் இந்த காலத்தில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

நீரிழப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள்:

கோடைக் காலத்தில் வியர்வை மூலம் உடல் தனது ஈரப்பதத்தை வேகமாக இழக்கிறது. ஆரோக்கியமான ஒருவர் நாள் முழுவதும் குறைந்தது 2 முதல் 2.50 லிட்டர் (daily drink water) தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது சுமார் 8 முதல் 10 குவளை வரை குடிக்க வேண்டும். குறைவாக தண்ணீர் குடித்தால், உடலில் நீரிழப்புப் பிரச்சனை ஏற்படலாம்.

ADVERTISEMENT

நீரிழப்பு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் (dehydration problems) பலவீனமடைந்து, நோய்கள் விரைவாகத் தாக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது சோர்வு, கடுமையான தலைவலி மற்றும் அதீத பலவீனம் போன்றவை ஏற்படத் தொடங்கும். இது தவிர, நீர்ச்சத்து பற்றாக்குறையால் உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து, வெப்ப பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்:

நீர்ப் பற்றாக்குறை என்பது தாகத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. குறைவாக நீர் அருந்துவதால் சிறுநீரின் அளவு குறைந்து, அது சிறுநீர்ப் பாதை நோய்களுக்கும் எரிச்சல் உணர்விற்கும் வழிவகுக்கிறது. நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக, ஒற்றைத் தலைவலி மற்றும் தாங்க முடியாத தலைவலி (Head ache) போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சருமம் வறண்டு, அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன.

ADVERTISEMENT

என்ன சாப்பிடலாம்? என்ன குடிக்கலாம்?:

உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருக்க வெறும் தண்ணீர் மட்டும் போதாது. அதற்குப் பதிலாக உங்கள் அதிகமான திரவ உணவுகளை எடுக்க வேண்டும். இயற்கையாகவே அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை ஒருவர் அதிகமாக உட்கொள்ள வேண்டும். குளிர்பானங்களுக்குப் (dehydration prevent drinks) பதிலாக, எலுமிச்சை சாறு, மோர், இளநீர் மற்றும் புதிய பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வெயிலில் செல்வதற்கு முன் குளுக்கோஸ் தண்ணீர் அருந்துவதும் ஒரு சிறந்த தேர்வாகும். இது தவிர, உங்கள் உணவில் சாலட் மற்றும் பச்சை காய்கறிகளுக்கு அதிக இடம் கொடுங்கள், மேலும் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சமச்சீர் உணவை சாப்பிட வேண்டும்.

களத்தில் பணியாற்றும் மக்களின் கவனத்திற்கு:

இப்போது தேர்தல் நேரம் என்பதால் பலருக்கும் களத்தில்தான் வேலை இருக்கும்.  ஆகவே, களத்தில் அல்லது வயல்வெளியில் வேலை செய்பவர்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் (Stay hydrated) அல்லது பிற திரவங்களைக் குடிக்க வேண்டும். அவ்வப்போது பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது, ஆற்றல் அளவைப் பராமரிக்கவும், நீர்ச்சத்து இழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share