உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் தக்காளி சூப் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
சூப் பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அனைத்து சூப்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. குறிப்பாக தக்காளி சூப் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். தக்காளி சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன, எப்படி தயாரிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தக்காளி சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Tomato Soup Health Benefits): தக்காளி சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தக்காளி சூப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. சளி, காய்ச்சல் வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது (Body heat): சூப்பில் உள்ள சூடு மற்றும் அதில் சேர்க்கப்படும் கருப்பு மிளகு ஆகியவை உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி சளியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
உடல் எடை குறைப்பு (Tomato soup for weight loss): தக்காளி சூப்பில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடை இழப்புக்கு உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும், எடை கட்டுப்பாட்டையும் எளிதாக்குகிறது.
ஆரோக்கியமான சருமம் (skin care) : தக்காளியில் உள்ள லைகோபீன் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. வழக்கமான நுகர்வு சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
தக்காளி சூப் செய்ய தேவையான பொருட்கள் (Ingredients for tomato soup) :
- தக்காளி- 4-5 பழுத்த தக்காளிகள்
- இஞ்சி – சிறிதளவு
- பூண்டு- 3-4 பற்கள்
- வெங்காயம் – 1
- உப்பு – சுவைக்கேற்ப
- கருப்பு மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்
செய்முறை (Tomato Soup Recipe) : பழுத்த தக்காளிகளை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். தக்காளியுடன் இஞ்சி, சிறிது தண்ணீர் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்றாக பேஸ்ட் செய்யவும். பிறகு அதனை வடிகட்டி மூலம் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய் சற்று இட்டு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து லேசாக இளஞ்சிவப்பு நிறமாகும் வரை வதக்க வேண்டும். அதில் வடிகட்டிய தக்காளி சாற்றைச் சேர்க்கவும். சூப் கெட்டியாகத் தெரிந்தால், சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். உப்பு மற்றும் மிளகு சேர்த்து 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது சூடான சுவையான தக்காளி சூப் தயார், இதனை நீங்கள் கிண்ணத்தில் ஊற்றி பரிமாறலாம்.
