ADVERTISEMENT

கொத்தமல்லியை (coriander leaves) 25 நாட்கள் வரை பச்சையாக வைத்துக்கொள்வது எப்படி? – சூப்பர் டிப்ஸ்

Published On:

| By Santhosh Raj Saravanan

How to keep coriander leaves fresh for Long Days

கொத்தமல்லியை (Coriander Leaves) 25 நாட்கள் வரை பச்சையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினாலோ போதுமானது.

நாம் தற்போது சமையல்களில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கத் தொடங்கியுள்ளோம். கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வந்து வைத்தால், அவை மிக வேகமாக காய்ந்துவிடுகின்றன. அதாவது, கொத்தமல்லி இலைகள் 2 நாட்களில் மஞ்சள் நிறமாக மாறிவிடுவதால் அதனை தூக்கி எறிந்துவிட்டு புதிதாக வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

கொத்தமல்லி இலைகள் ஏன் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன? : கொத்தமல்லி இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு முக்கிய காரணம் அதில் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் பூஞ்சைகள் இருப்பதே. குளிர்சாதன பெட்டியின் உள்ளே இருக்கும் மூடிய சூழல் மற்றும் ஈரப்பதம் இலைகள் மஞ்சள் ஆவதை துரிதப்படுத்துகின்றன. ஆகவே, 2 நாட்களில் கொத்தமல்லி இலைகள் மஞ்சளாகிவிடுகின்றன.

ஆனால், 2 நாட்களில் காய்ந்துவிடும் கொத்தமல்லி இலையை 25 நாட்கள் வரை பச்சை நிறம் மாறாமல் புதிதாக வைத்திருக்கலாம். அதற்கு நீங்கள் கொத்தமல்லி இலைகளை சேமிக்கும்போது சிறு சிறு விஷயங்களை கவனித்து பின்பற்றினாலே போதும்.

ADVERTISEMENT

வேர் பகுதிகளை அகற்ற வேண்டும்: கொத்தமல்லி இலைகளை சேமிக்கும்போது முதலாவதாக அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். வேர்களில் அதிகமாக மண், ஈரப்பதம் இருப்பதால் அது முழு கொத்தமல்லி கொத்தையும் கெடுத்துவிடுகிறது. ஆகவே, கத்தி அல்லது கத்தரிக்கோலை பயன்படுத்தி வேர்களை நறுக்கிவிட வேண்டும்.

வேர்களை அகற்றிய பிறகு கொத்தமல்லி இலைகளை நன்றாக பரப்பி நன்கு பரிசோதிக்க வேண்டும். இலைகளில் ஏதேனும் ஒரு இலை வாடியதாகவோ, கருமை அல்லது மஞ்சள் நிறமாகவோ தோன்றினால் அதனை உடனடியாக அகற்றிவிட வேண்டும். சேதமடைந்த ஒரு இலை மீதமுள்ள நல்ல இலைகளை பாதிக்கலாம்.

ADVERTISEMENT

கொத்தமல்லியை திறந்து வைப்பதற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் சேமித்து வைக்கலாம். சுத்தமான, உலர்ந்த, காற்று புகாத கொள்கலனை தேர்வு செய்து கொத்தமல்லி இலைகளை வைக்க வேண்டும். கொத்தமல்லியை கொள்கலனில் வைப்பதற்கு முன்பாக ஒரு பேப்பர் அல்லது துணியால் அதன் அடிப்பகுதியை நன்றாக துடைத்துவிடலாம். இப்படி செய்யும்போது அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது.

பிளாஸ்டிக் கொள்கலனில் கொத்தமல்லியை நிரப்பிய பிறகு இறுக்கமாக மூடி ப்ரிட்ஜில் சேமிக்க வேண்டும். காற்று புகாத கொள்கலன் ஈரப்பதம் உள்ளே நுழைவதை தடுக்கிறது. ஆனால், உள்ளே இருக்கும் குளிர்ச்சி கொத்தமல்லி இலைகளை மிருதுவாக வைத்திருக்கும். அத்துடன், கொத்தமல்லி காற்றுடன் நேரடி தொடர்பில் இருக்காது என்பதால், அது உலர்ந்துவிடாமல் இருக்கும்.

வேர்களை அகற்றுவது, சேதமடைந்த இலைகளை எடுத்துவிடுவது, காற்றுபுகாத கொள்கலனில் சேமித்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் கொத்தமல்லி 25 நாட்கள் வரை புதிதாகவும், பச்சையாகவும் இருக்கும். அவ்வப்போது கொள்கலனை சரிபார்த்து, அது ஈரமாகிவிட்டால் காகிதம் அல்லது துணியை மாற்றலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share