ஈழ இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்பட்டது எப்படி என அந்த அமைப்பில் முக்கிய பொறுப்பாளராக பணியாற்றிய தயாமோகன் தற்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ”நான் தயா மோகன். இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தேன். நான் இருந்த பகுதிகளில் கொரில்லா முறையில்லான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது நான் மட்டக்களப்பில் நடந்த தாக்குதலில் காயமடைந்து மறைவிடத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்தேன்.

நான் மட்டக்களப்பு செல்வதற்கு முன்பாக அக்டோபர் மாதத்தில் கடைசியாக கிளிநொச்சியில் வைத்து தலைவர் பிரபாகரனை சந்தித்தேன். இலங்கை ராணுவத்தின் போர் கெடுபிடிகள் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு கி.மீ என்ற முறையில் அங்கிருந்து மட்டக்களப்பு செல்வதற்கு 35 நாட்கள் ஆனது.
எனக்கு அந்த நேரத்தில் தலைவர் குடும்பத்தில் அவரது மூத்த மகனான சாள்ஸ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி அதிகாலை வீரச்சாவு அடைந்தார்.
அதற்கு முன்னதாக பிரபாகரனின் மகள் துவாரகா படுகொலை செய்யப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது.அவர் மே 13 ஆம் தேதி உயிரிழந்ததாகவும், அங்கு இருந்த போராளிகளின் மூலம் இந்த தகவலை உறுதி செய்தோம்.
எங்களது இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட செய்தி எப்போதும், அறிவிக்கப்பட்ட செய்தியாகவே இருக்கும்.அந்த போர் சூழ்நிலையில் அதை மாற்றி அமைக்கின்ற, ஆய்வு செய்கின்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இல்லையென்றால் இதுகுறித்து தெளிவாக என்ன நடந்தது என புத்தகமே வெளியிட்டிருப்போம்.

துவாரகாவின் மரணம் என்பது சாள்ஸின்முன்பு நடத்ததால் அவரின் வித்துடல் எடுத்து விதைத்ததாக நாங்கள் அறிகிறோம்.
உதாரணமாக பிரிகேடியர் சொர்ணத்தின் மூத்த மகள் 2009 மே 12ஆம் தேதி வீரச்சாவு அடைந்த சண்டையில், துவாரகாவும் காயமடைந்து அதற்கு அடுத்த நாள் மே 13 ஆம் தேதி உயிரிழந்ததாகவே எமக்கு செய்தி கிடைத்தது. இவை அனைத்தும் தொலைதொடர்பு மூலம் கிடைத்த செய்திகள்.
அண்ணி (பிரபாகரனின் மனைவி) மதிவதனி கொத்துக் குண்டு வீச்சில் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பிராபகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்து நூறு சதவீதம் எனக்கு தெரியாது. அவரது இறுதிநாளில் எங்கள் கடற்படைகளின் சிறப்பு தளபதி சூசையின் கண்காணிப்பில் அவர் இருந்தார். அதே நேரம் சூசையோடு இருந்த போராளிகள் சிலர் ராணுவத்திடம் சரணடைந்த போது, அவர்களோடு பாலச்சந்திரனும் ராணுவத்தின் கையில் சிக்கி கொண்டார். அதன்பின்னர் பாலச்சந்திரனின் கொல்லப்பட்ட புகைப்படங்களை தான் பார்த்தோம்” என தயாமோகன் தெரிவித்தார்.