இன்றைய காலத்தில் பான் கார்டு மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. சைபர் குற்றவாளிகள் உங்கள் பான் கார்டு விவரங்களை வைத்து மோசடி செய்து பணத்தை சுருட்டி விடுகிறார்கள். இதனால் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு கடன் சுமை வந்து சேர்கிறது. இந்த பான் கார்டு மோசடி எப்படி நடக்கிறது, நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
பான் கார்டு என்பது வெறும் வரி செலுத்தும் ஆவணம் மட்டுமல்ல. அது உங்கள் நிதி அடையாளமாக மாறிவிட்டது. வங்கி கணக்கு தொடங்க, கடன் வாங்க, கிரெடிட் கார்டு பெற, முதலீடு செய்ய என எல்லா இடங்களிலும் பான் கார்டு அவசியம். இதைத்தான் மோசடி கும்பல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பல்வேறு தந்திரமான வழிகளில் உங்கள் பான் கார்டு விவரங்களை அவர்கள் பெற்று விடுகிறார்கள்.
உதாரணமாக:
- KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறி போலி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்புவது.
- போலியான கடன் செயலிகள் (loan apps) அல்லது இணையதளங்களில் உங்கள் பான் கார்டு விவரங்களை பதிவேற்றம் செய்வது.
- சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிரும் பான் கார்டு புகைப்படத்தை திருடுவது.
- தரவு கசிவுகள் (data leaks) அல்லது பழைய பதிவுகளில் இருந்து உங்கள் விவரங்களை அணுகுவது.
இப்படி உங்கள் பான் கார்டு விவரங்கள் கிடைத்தவுடன் மோசடி செய்பவர்கள் எளிதாக டிஜிட்டல் கடன் செயலிகள் அல்லது NBFC-கள் மூலம் உங்கள் பெயரில் கடன் பெற்று விடுகிறார்கள். பல செயலிகள் குறைந்த ஆவணங்களுடன், விரைவாக கடன் வழங்குவதால் இந்த மோசடி இன்னும் எளிதாகிறது. இந்த மோசடியின் மிக பயங்கரமான விஷயம் என்னவென்றால், கடன் தொகை மோசடி செய்பவரின் வங்கி கணக்கிற்கோ அல்லது வாலட்டிற்கோ சென்றுவிடும். ஆனால், கடனை திருப்பிச் செலுத்தும் தவணைகள் (EMIs), வசூல் அழைப்புகள் மற்றும் நோட்டீஸ் அனைத்தும் உங்களை வந்து சேரும்.
உங்களுக்கே தெரியாமல் திடீரென்று உங்கள் CIBIL ஸ்கோர் அல்லது கடன் தகுதி மதிப்பெண் (credit score) வெகுவாகக் குறைந்துவிடும். அடுத்து கடன் வசூல் முகவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யத் தொடங்குவார்கள். இதனால், எதிர்காலத்தில் நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறுவது கடினமாகிவிடும்.
உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள்:
- நீங்கள் கடன் வாங்காமலேயே கடன் அல்லது EMI பற்றிய செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவது.
- உங்கள் வங்கியிலிருந்தோ அல்லது கடன் வசூல் முகவரிடமிருந்தோ அழைப்பு வருவது.
- உங்கள் கடன் தகுதி மதிப்பெண் திடீரெனக் குறைவது.
- உங்கள் CIBIL அறிக்கையில் உங்களுக்குத் தெரியாத கடன் கணக்குகள் இருப்பது.
நாம் எங்கே தவறு செய்கிறோம்?
- சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (suspicious links) கிளிக் செய்து உங்கள் பான் கார்டை பதிவேற்றம் செய்வது.
- உங்கள் பான் கார்டு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது.
- குறைந்த வட்டி அல்லது உடனடி கடன் தருவதாகக் கூறும் போலி செயலிகளை பதிவிறக்கம் செய்வது.
- “உங்கள் கணக்கு மூடப்படும், KYC-ஐ புதுப்பிக்கவும்” என்று வரும் அழைப்புகளை நம்புவது.
பான் கார்டு மோசடிகளைத் தடுப்பது எப்படி?
- உங்கள் பான் கார்டின் நகல் அல்லது புகைப்படத்தை அந்நியர்களுடன் ஒருபோதும் பகிர வேண்டாம்.
- ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் அல்லது NBFC-களில் மட்டுமே கடன் வாங்கவும்.
- தெரியாத கடன் செயலிகள் அல்லது இணையதளங்களைத் தவிர்க்கவும்.
- ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கடன் அறிக்கையை (credit report) சரிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- KYC தொடர்பான அழைப்புகள் அல்லது செய்திகளை உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நேரடியாகச் சரிபார்க்கவும்.
பான் கார்டு விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது உங்கள் கடன் தகுதி மதிப்பெண்ணையும் உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
