ADVERTISEMENT

தீபாவளி பண்டிகை : 3 முனையங்கள்… 20,378 சிறப்புப் பேருந்துகள்… அமைச்சர் வெளியிட்ட முழு விவரம் இதோ!

Published On:

| By christopher

how many special bus for diwal 2025 : full details

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

இந்தாண்டு தீபாவளி வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே 108 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி. மகேஷ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து 14 ஆயிரத்து 268 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

அதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக அக்டோபர் 21 முதல் 23 வரை, தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என ஆக மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மூன்று முனையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

1A. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் :

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

1B.கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம் :

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

2. கோயம்பேடு பேருந்து நிலையம் :

கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

3.மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும். மேலும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

இந்த மூன்று பேருந்து முனையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக நகர்ப் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். புறநகர் ரயில் சேவையை அதிகரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை ஒத்திவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு விவரங்கள் :

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10, கோயம்பேடு பேருந்து முனையத்தில் 2 என மொத்தம் 10 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும், ஆப் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

இதுவரை 2,03,738 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர முன்பதிவு செய்யாத பயணிகளும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அறிவுரை :

கார் மற்றும் பிற வாகனங்களில் செல்வோருக்காக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பயணிக்க வேண்டிய மாற்றுப் பாதைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுப்பாதையாக வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, ஓ.எம்.ஆர். சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச் சுற்றுச்சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புகார் தெரிவிக்க..

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், 1800 425 6151 என்ற இலவச எண்ணையோ அல்லது 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

அரசுப் பேருந்துகள் தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கு 9445014436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கையாக பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share