உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.
86 வயதான பாமக நிறுவனர் ராமதாஸ், மகனுடனான மோதல்போக்கு காரணமாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வது, கூட்டம், மாநாடு நடத்துவது என பிஸியாகவே இருந்தார்.
இந்தசூழலில் இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று (அக்டோபர் 6 ) காலை அவருக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி, மருத்துவர்களிடம் ராமதாஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிட்ம பேசிய அவர், ‘ஐயா ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்க்கமுடியவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸுடனே இருந்து அவரை பார்த்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
“மருத்துவர் அய்யா உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டுவருகிறேன்‘ என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறி, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ராமதாஸை அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோரும் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.