இந்தியாவின் AI முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு ஊடகங்களின் பார்வையில் ஏளனமே தூக்கலாக இருக்கிறது.
ஷைலஜா பாஜ்பாய்
பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தபடி, 2047க்குள் இந்தியா ஒரு பொருளாதார, தொழில்நுட்ப வல்லரசாக மாற முடியுமா? மாறலாம், மாறாமலும் போகலாம். ஆனால் அதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு’ (AI Impact Summit) குறித்து சர்வதேச ஊடகங்களில் சமீபத்தில் வெளிவந்த செய்திகள், கருத்துக்கட்டுரைகள், ஆவணப்படங்கள் பெரும்பாலும் ஊக்கமளிப்பதாகவே உள்ளன. அவை இந்தியாவின் திறனை அங்கீகரிக்கின்றன, ஆனால் — எப்போதுமே ஒரு ‘ஆனால்’ இருக்குமல்லவா — அது ஒரு எச்சரிக்கையுடனேயே வருகிறது. “பெரியவரே, உங்கள் சக்திக்கு மீறி நீங்கள் குத்துச்சண்டை போட முயற்சிக்கிறீர்கள்” என்பது போல அவை உள்ளன.

கடந்த வாரம் புது தில்லியில் நடைபெற்ற ‘AI இம்பாக்ட் உச்சிமாநாட்டை’ எடுத்துக்கொள்வோம். இதன் முடிவைப் பற்றி முன்னணி வெளிநாட்டு ஊடகங்கள் தெளிவற்ற தீர்ப்பையே வழங்கியுள்ளன.
அவர்கள் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னால்: “ஆமாம், உங்களிடம் படித்த உழைப்பாளர்கள் உள்ளனர்; உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை உங்களிடம் உள்ளது; நீங்கள் சரியான திசையில்தான் முன்னேறுகிறீர்கள்; உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமும் நீங்கள்தான். ஆனால், நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது.”
இந்தக் கருத்து ஒருபுறம் இருந்தாலும் இந்த கட்டுரைகளின் தலைப்புகள் இந்திய வாசகர்களுக்குச் சற்று ஏளனம் அல்லது மேட்டிமைத்தனமான தொனியில் (Patronising) இருப்பதாகத் தோன்றக்கூடும்.
“இந்தியா வெறும் பகட்டான நிகழ்வுகள் மூலம் AI வல்லரசாக முடியாது” என்று நிதிச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் (Bloomberg) ஒரு கருத்துக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
“இந்தியாவின் AI லட்சியங்கள் உலகளாவிய உச்சிமாநாட்டில் எல்லைகளைத் தொட்டுவிட்டன” என்று ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) கருதியது. தி எகனாமிஸ்ட் (The Economist) தனது அச்சுப் பதிப்பில்,“செயற்கையாக ஊதப்பட்ட ஒன்று” (Artificially Inflated) என்று நேரடியாகத் தீர்ப்பளித்தது.
தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) மட்டும் சற்று மென்மையாக இருந்தது: “AI உச்சிமாநாட்டில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இந்தியா ஒரு வழியைக் கண்டறிய முயல்கிறது.”
ஆர்ப்பாட்டமும் விஐபி கலாச்சாரமும்
‘தி எகனாமிஸ்ட்’ இதழ், “இந்தியாவின் விஐபி கலாச்சாரம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது” என்ற தலைப்பில், இந்த உச்சிமாநாட்டின் ஏற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தது.

தில்லியில் வசிக்கும் நம்மில் பெரும்பாலானோர் ‘விஐபி கலாச்சாரம்’ குறித்த அந்தப் பார்வையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்—குறிப்பாக விஐபிகளின் வருகையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலிலும் சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளும் நமக்கு அது புரியும்.
இந்த உச்சிமாநாடு பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
முதலில், சில நாட்களில் உள்ளே நுழைவதில் பல சிக்கல்கள் இருந்தன. ‘தி எகனாமிஸ்ட்’ இதழ் அதன் மதிப்பீட்டில் மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியது: “ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் அங்கே கண்டது என்னவோ இந்தியாவின் ‘விஐபி கலாச்சாரத்தின்’ வெளிப்பாட்டைத்தான்… நாட்டின் தலைவர்கள் தங்களைச் சேவகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள், ஆனால் எஜமானர்களைப் போல நடந்துகொள்கிறார்கள்,” என்று அது எழுதியது.
ப்ளூம்பெர்க்கின் கேத்தி தோர்பெக், இந்த உச்சிமாநாட்டின் “செயலின்மையை” (Dysfunction) சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான போஸ்டர்கள் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்: “… அவர் எப்போதும் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பது போல இது இருக்கிறது,” என்றார் அவர்.

உச்சிமாநாட்டைப் பொறுத்தவரை, ஊடகங்கள் ஒரு சமநிலையான போக்கைக் கடைப்பிடித்தன. “AI அதிகாரத்திற்கான போட்டி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ளது, (ஆனால்) பின்தங்கியிருப்பவர்களுக்காக இந்தியா ஒரு திட்டத்தை (Pitch) வைத்துள்ளது” என்று NYT எழுதியது.
இந்தியாவிடம் அமெரிக்காவின் உள்நாட்டு AI நிறுவனங்களோ, அல்லது சீனாவின் தொழில்நுட்ப அறிவோ அரிய வகை கனிம வளங்களோ இல்லை; அதற்குப் பதிலாக, இந்தியா தொழில்நுட்பத்தைத் தனது வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. ‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளின் தார்மீகக் குரலாகத் தன்னை அது முன்னிறுத்துகிறது.
‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ இதழின் கருத்து இது: “உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, AI தொடர்பான முடிவுகள் அமெரிக்கா, சீனாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது… (ஆனால்) ஒரு பெரிய AI சக்தியாக மாறுவதற்குத் தேவையான பெரிய அளவிலான கணினி உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இன்னும் இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.”
ப்ளூம்பெர்க் இதழுக்கு இந்தியாவின் AI கனவுகள் மீது சந்தேகம் உள்ளது. “ஆர்வம் கொண்ட நுகர்வோர் என்பதிலிருந்து, தீவிரமான உற்பத்தியாளராக இந்தியா எப்படி மாறப்போகிறது?” என்று தோர்பெக் கேட்கிறார்.

நிலம், நீர், மின்சாரம் ஆகியவை இந்தியாவில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும்போது, நாட்டின் மின் விநியோகத்தையும் நீர் ஆதாரங்களையும் இது மேலும் பாதிக்கும் என்பவற்றை இந்தியாவின் பிரச்சினைகளாக அவர் பட்டியலிட்டார்.
‘தி எகனாமிஸ்ட்’ இதழ், “பல வழிகளில் இது ஒரு கற்பனை மட்டுமே. இந்தியாவிடம் மேம்பட்ட உற்பத்தித் திறன் இல்லை, மேலும் AI-க்குத் தேவையான சிப்களை (Chips) இந்தியாவால் தயாரிக்க முடியாது,” என்று எழுதியது. பின்னர் அந்தப் கசப்பான உண்மையைச் சமன் செய்ய, “900 மில்லியன் இணையப் பயனர்களைக் கொண்டுள்ள இந்தியா, தரவுகளைச் சேகரிக்க விரும்பும் AI நிறுவனங்களுக்குப் புறக்கணிக்க முடியாத சந்தையாக உள்ளது,” என்று சேர்த்துக்கொண்டது. மேலும், அங்கே நிலவும் “தரவு மையங்களின் வளர்ச்சியை” (Data centre boom) அந்த இதழ் பாராட்டியது.
நிலக்கரியும் பாலும்
கடந்த சில வாரங்களில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான பிற இந்திய அறிக்கைகளும் மற்றும் வீடியோக்களும் இந்தியாவின் பொருளாதார, தொழில்நுட்பச் சொத்துக்களின் மீதே தங்களின் ஆர்வம் இருப்பதை உணர்த்தின.

‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ இதழ், “இந்தியா மற்றும் நிலக்கரியின் உண்மையான விலை” என்ற தலைப்பில் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்தது. அதன் நிருபர் ஆண்ட்ரேஸ் ஷிபானி, சுற்றுச்சூழல், சுகாதார அபாயங்கள் இருந்தபோதிலும், மின் உற்பத்திக்காக இந்தியா நிலக்கரியைச் சார்ந்து இருப்பதை ஆராய்கிறார். அவர் சத்தீஸ்கரில் உள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமான ‘கெவ்ரா’வுக்குச் (Gevra) செல்கிறார்.
இந்தியா ஒரு “புதிர்” (Conundrum) போன்ற சூழலை எதிர்கொள்கிறது என்று அவர் கூறுகிறார். இந்தியா ஒரு “உற்பத்தி மையமாக” மாற விரும்புகிறது, ஆனால் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார். பரவலான மாசுபாடும் சுற்றுச்சூழல் சீரழிவும்தான் அந்த விலை என்கிறார்.
நிலக்கரியைச் சார்ந்திருக்கும் 20 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் எதிர்காலம் ஆகியவை குறித்த ஆழமான பகுப்பாய்வு இது. 2070-க்குள் நிலக்கரி படிப்படியாக நிறுத்தப்படும் என்று ஒரு நிபுணர் அதில் கூறுகிறார். “நிலக்கரியிலிருந்து இந்தியா வெளியேற வழி இருக்கிறதா என்று என்னைக் கேட்டால், அப்படி ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்கிறார் ஷிபானி.

குஜராத்தின் சபர்காந்தாவில் பாலில் கலப்படம் செய்வது குறித்த செய்தி பிரெஞ்சு நாளிதழான லி மாண்டே (Le Monde) கவனத்தை ஈர்த்தது. அந்த நாளிதழ் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது, “பசுக்கள் புனிதமாகக் கருதப்படும் இந்தியாவில், பால் சந்தை கலப்படப் பொருட்களால் நிறைந்துள்ளது” என்று ஒரு குத்தலான குறிப்புடன் தொடங்கியது. இந்த விஷயம் இந்திய ஊடகங்களில் ஓரளவு வந்திருந்தாலும், பெரிதாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது உலக ஊடகங்கள் இந்தியாவின் ஆர்வத்தை மெச்சும் அளவுக்கு அந்த ஆர்வத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதன் திறன் குறித்து நம்பிக்கை தெரிவிக்கவில்லை.
