பிகார் தேர்தல் : 2020இல் இழுபறி, 2025இல் அதிரடி:  எப்படி நடந்தது இந்த அதிசயம்?

Published On:

| By Minnambalam Desk

ரோஷன் கிஷோர்

பிகார் 2025 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்வாக்கு சதவீதம் 46.6% ஆக அதிகரித்தது. மகாபந்தனின் வாக்கு சதவீதம் (37.9%) மாறவில்லை.

2020 சட்டமன்றத் தேர்தலில் பிகாரில் கடும் போட்டி நிலவியது. மேலும் இரு முக்கியக் கூட்டணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்கு சதவீதத்தைப் பெற்றன. அவற்றின் வாக்குகளில் வெறும் 0.03% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்த வாக்கு சதவீதத்தில் மகாபந்தன் அல்லது மெகா கூட்டணியை விட சுமார் 10 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான இடப் பங்கீட்டின் வேறுபாடு இன்னும் அதிகரித்துள்ளது. 2020இல் வெறும் ஆறு சதவீத இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெற்றிருந்த தேஜகூ, இம்முறை 68.7 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? பிகாரில் 2020, 2025 தேர்தல்களுக்கு இடையில் தேர்தல் கணக்கு ஏன் மாறியது? 

மெகா கூட்டணியின் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக (2020இல் 37.23%, 2025இல் 37.9%) உள்ளது. தேஜகூவின் வாக்கு சதவீதம் 37.26%இலிருந்து 46.6%ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல்களில் தேஜகூவுக்குக் கிடைத்த கூடுதல் ஆதரவு எங்கிருந்து வந்தது?

ADVERTISEMENT

கூடுதல் வாக்கு சதவீதத்தில் சுமார் ஐந்து சதவீதம் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆகிய இரண்டு முக்கிய கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வந்துள்ளன. 2020இல் போட்டியிட்ட இடங்களைவிட  (225) இந்த முறை இரண்டு கட்சிகளும் குறைவான எண்ணிக்கையிலான இடங்களில் (202) போட்டியிட்ட போதிலும் இது நிகழ்ந்துள்ளது.

இது அவர்களின் வெற்றியின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு கட்சிகளில் ஜேடியூவின் வாக்கு சதவீதம் அதிகமாக அதிகரித்துள்ளது. அது கடந்த முறை பாஜகவைவிட மிகவும் பின்தங்கி இருந்தது.

ADVERTISEMENT

கூடுதல் வாக்கு சதவீதத்தின் மீதமுள்ள பெரும்பாலானவை லோக் ஜனசக்தி கட்சியிடமிருந்து (ராம் விலாஸ் – எல்ஜேபி) வந்துள்ளன. இது கடந்த முறை தேஜகூவில் இணைந்து போட்டியிடவில்லை. தேஜகூவின் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும் சக்தியாகச் செயல்பட்டு ஜேடியுவைஐப் பாதித்தது. எல்ஜேபியின் வாக்கு சதவீதம் 2020, 2025 தேர்தல்களில் பெரும்பாலும் மாறாமல் உள்ளது: முறையே 5.7% மற்றும் 5%.

தேஜகூ தனது கூட்டாளியான விக்காஷீல் இன்சான் கட்சியை இந்தத் தேர்தலில் மெகா கூட்டணியிடம் இழந்தது. இது 2020இல் 1.5% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த இழப்பு, உபேன் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தேஜகூவில் இணைந்ததாலும், ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் (மதச்சார்பற்ற) வாக்கு சதவீதம் ஓரளவு அதிகரித்ததாலும் ஈடு செய்யப்பட்டது. 

மெகா கூட்டணிக்கு வாக்களிக்காதோர் தேஜகூவுக்குப் பின்னால் ஒருங்கிணைந்ததன் விளைவாக, 2020இல் பெரும்பாலான மெகா கூட்டணி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வாக்குகளே இந்த முறையும் கிடைத்தாலும் அது அவர்கள் வெற்றி பெறப் போதுமானதாக இல்லை. அதாவது மெகா கூட்டணி பலவீனமடையவில்லை. தேஜகூ பலம் கூடியுள்ளது.

இந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் சராசரியாக 47.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 1977 தேர்தல்களுக்குப் பிறகு மாநிலத்தில் ஒரு வேட்பாளருக்குக் கிடைத்த அதிகபட்ச சராசரி வெற்றி வித்தியாசம் ஆகும். 2025 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவர்களின் வாக்குச் சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால், மெகா கூட்டணியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 71.4% பேர் சராசரிக்கும் குறைவான வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளனர். 

2020 சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியின் வெற்றிகளில் தேஜகூவின் வெற்றி வாய்ப்பைக் கெடுத்த சக்திகள் முக்கியக் காரணியாக இருந்தன. மெகா கூட்டணி 65 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது மூன்றாம் இடம் பிடித்த கட்சி முதல் இரு கட்சிகளுக்கிடையே இருந்த வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இதுவே இரண்டாம் இடம் பிடித்த கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. 2025 தேர்தலில் இந்த எண்ணிக்கை 23 ஆகக் குறைந்துள்ளது.

சிராக் பாஸ்வானின் எல்ஜேபி, உபேன் குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ் (2020இல் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி என்று அறியப்பட்டது) ஆகிய இரண்டு தேஜகூ கூட்டணிக் கட்சிகள் 2020இல் தேஜகூவுடன் இணையாததால் அக்கூட்டணிக்குச் சரிவு ஏற்பட்டது.

இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே, வெற்றி வாய்ப்பைக் கெடுத்த சக்திகள் காரணமாக மெகா கூட்டணி வெற்றி பெற்ற 65 இடங்களில் 40க்குப் பங்களித்தன (எல்ஜேபி மூலம் 30, ஆர்எல்எஸ்பி மூலம் 10). இதில் 28 இடங்களை ஜேடியூ மட்டுமே இழந்தது. 2020 தேர்தலில் ஜேடியூ, எல்ஜேபிக்கு எதிராகப் போட்டியிட்டதால், ஜேடியூ 9 இடங்களில் வெற்றி வாய்ப்பைக் கெடுத்து மெகா கூட்டணி வெற்றி பெற உதவியது, இதில் 4 இடங்களை எல்ஜேபி இழந்தது.

வெற்றி வாய்ப்பைக் கெடுத்த சக்திகளால் தேஜகூ பெற்ற வெற்றிகளும் குறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற 202 சட்டமன்றத் தொகுதிகளில் 68 தொகுதிகளில் 50%-க்கும் அதிகமான வாக்குச் சதவீதத்துடன் வெற்றி பெற்றதால், வெற்றி வாய்ப்பைக் கெடுத்த சக்திகளின் தாக்கம் குறைந்துவிட்டது. 

எல்ஜேபி, கூட்டணிக்குள் மீண்டும் வந்ததால், ஜேடியூவுக்கு ஏற்பட்ட முன்னேற்றம் தேஜகூவின் வெற்றிக்குக் கிடைத்த ஊக்கத்தில் முக்கியக் காரணமாகும். இந்த முன்னேற்றத்தின் ஒரு பெரிய பகுதி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நேரடிப் போட்டிகளில் பிரதிபலித்தது. 2020இல் ஜேடியுவும் ஆர்ஜேடியும் முறையே 115, 144 இடங்களில் போட்டியிட்டன. இவற்றில் 61 இடங்களில் நேரடியாக மோதின. இந்த 61 இடங்களில் 40இல் ஆர்ஜேடி வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் காற்று ஜேடியுவுக்குச் சாதகமாக வீசியது. 

இந்த முறையும் இந்த இரு கட்சிகளும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான இடங்களில் (59) நேரடிப் போட்டியில் இருந்தன. இதில் ஜேடியு 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 2010இல் தேஜகூ கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றபோது இருந்த நிலவரத்திலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. 

ரோஷன் கிஷோர், ஹிந்துஸ்தான் டைம்ஸின் தரவுகள் மற்றும் அரசியல் பொருளாதார ஆசிரியர்.

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share