விமர்சனம் : ஹவுஸ்மேட்ஸ்!

Published On:

| By uthay Padagalingam

Housemates Movie Review 2025
Housemates Movie Review

வீட்டில் ஒருவராக நம்மை ஆக்கியதா..?

குறிப்பிட்ட வகைமையில் அமைந்த படம் என்பதாக ‘புரோமோஷன்’ பணிகள் நடைபெற்ற நிலையில், தியேட்டருக்கு சென்றபின்னர் வேறொரு வகைமையாகப் படம் மிளிர்வது வித்தியாசமான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் ‘ஹாரர்’ படமாக முன்னிறுத்தப்பட்ட ‘ஹவுஸ்மேட்ஸ்’ திரையில் வேறொரு உலகத்தைக் காட்டுகிறது. அதுவே அப்படத்தின் யுஎஸ்பி ஆகவும் உள்ளது.

ராஜவேல் இயக்கியுள்ள இப்படத்தில் தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்துல் லீ, குழந்தை நட்சத்திரம் கென்ரிக் ஆஷ்லே உட்படச் சிலர் நடித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

ஒரே வீட்டில்..!

ADVERTISEMENT

காதல் மனைவியோடு தான் வாங்கிய ஒரு பழைய பிளாட்டுக்கு குடி போகிறார் ஒரு இளைஞர். அங்கு சில வினோதமான விஷயங்கள் நிகழ்கின்றன. அவற்றைக் கண்டு பீதியுறுகிறார் அந்த இளம்பெண். ஆனால், அந்த இளைஞர் அதனை நம்பத் தயாராக இல்லை.

’பழைய பிளாட்டை வாங்கினதால தானே இப்படிச் சொல்ற. இதுக்கே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன் தெரியுமா’ என்பதாக அந்த ஆணின் ’ரியாக்‌ஷன்’ இருக்கிறது. அந்தப் பெண் என்ன சொன்னாலும் அவர் நம்ப மாட்டேன் என்கிறார்.

ADVERTISEMENT
Housemates Movie Review 2025

ஒருநாள் அவரே அப்படிப்பட்ட வினோத அனுபவங்களுக்கு ஆளாகிறார்.

அதற்கான காரணம் அறிய முற்படும்போது, அதே வீட்டில் குழந்தையோடு ஒரு தம்பதி வசிப்பது தெரிய வருகிறது.

அது எப்படிச் சாத்தியம் எனும்போது, ஒரு உண்மை அவர்களைத் தாக்குகிறது. அது எப்படிப்பட்டது? அதன்பின் அவர்களது வாழ்க்கை என்னவானது என்று சொல்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’.

கிட்டத்தட்ட ‘டைம் ட்ராவல்’ எனப்படும் காலப்பயணத்தைச் சொல்கிற ‘அறிவியல் புனைவு’ ரகக் கதை தான். அதனை ‘சிம்பிளாக’ ஒரு வீடு, இரு குடும்பங்கள் எனச் சொல்லியிருக்கிறது இப்படம்.

’ஸ்பாய்லர்’ அலர்ட்!

ஹவுஸ்மேட்ஸ் என்ற டைட்டிலும் அதன் வடிவமைப்பில் இருக்கிற ‘மின்னல்’ குறியீடும் நமக்குக் கதையின் முக்கிய நிகழ்வைச் சூசகமாக உணர்த்தும். அது படம் பார்த்த பிறகே தெரிய வரும். ஆனால், அதனை மீறியும் இக்கதையில் நமக்குப் பல சந்தேகங்கள் எழுகின்றன; படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எத்தனை யோசித்தாலும் அவை தீர்வதாக இல்லை அல்லது அந்த தீர்வு புரியும்படியாகத் திரையில் சொல்லப்படவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. அதுவே ‘ஹவுஸ்மேட்ஸ்’ஸின் பலவீனம்.

இதற்கு மேல் சொல்கிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர் அலர்ட்’ ரகமாக மாறலாம். அது வேண்டாமே என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கதையில் தர்ஷன் – அர்ஷா ஜோடி புதுமணத் தம்பதியாக வருகிறது. குறிப்பிட்ட நிகழ்வுக்குப் பிறகு, அவர்கள் தான் அந்த வீடு வினோதமாக இருப்பதாக உணர்கின்றனர்.

இன்னொரு புறம் காளி வெங்கட் – வினோதினி ஜோடி காட்டப்படுகிறது. அவர்கள் எப்படி உணர்கின்றனர் என்பதை முழுக்கச் சொல்லாமல், குழந்தை நட்சத்திரம் கென்ரிக் மட்டுமே திரையில் காட்டப்பட்டிருக்கிறார். அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம்.

நடப்பது ‘அமானுஷ்யம்’ அல்ல என்று இரு தரப்பும் உணர்கிற இடம் மிக முக்கியமானது. அது திரையில் ஓரளவுக்கு எளிதாகக் கையாளப்பட்டிருக்கிறது.

Housemates Movie Review 2025

இரு தரப்பும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதற்குப் பதிலாகக் கையால் எழுதித் தகவல் பரிமாற்றம் மேற்கொள்கின்றனர். ஒருகட்டத்தில், அவர்கள் பேசுவதாகவே காட்டப்படுகிறது. அதனைக் கூட, ‘படைப்பு சுதந்திரம்’ என விட்டுவிடலாம்.

ஆனால், இரு குடும்பங்களும் ஒரே மாதிரியான பொருட்களை உபயோகிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யதார்த்த வாழ்வில் அது எந்தளவுக்குச் சாத்தியம் என்றும் தெரியவில்லை.

இரு குடும்பங்கலும் இரண்டு வேறுபட்ட உலகங்களில் வாழ்வதாகக் கொண்டால், அவற்றை கோடு கிழித்துக் காண்பிப்பதற்கான வித்தியாசங்கள் ‘சூசகமாக’ திரையில் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், படம் பார்க்கிற நம் கண்களில் அவை படவில்லை.

இப்படியான விஷயங்கள் இந்த படத்திற்குப் பின்னடைவாக உள்ளன. மிக முக்கியமாக, கிளைமேக்ஸில் சொல்லப்படும் திருப்பம் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த நமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. அதுவே இப்படத்தின் பெரும் பலவீனம்.

ஆனால், இவற்றை மீறி தியேட்டரில் மக்கள் சிரித்து மகிழ்கின்றனர். அதற்குக் காரணம், இக்கதையிலுள்ள அந்த வித்தியாசமான அம்சம்தான்.

‘இந்தப் படம் ஹாரர் இல்லை’ என்று தெரிந்ததுமே ரசிகர்கள் அடைகிற ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் இயக்குனர், அதற்கடுத்து வரும் காட்சிகளில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதுவே இப்படத்தின் ப்ளஸ்.

’சுமார்’ பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு உருவம் தந்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ், படத்தொகுப்பாளர் ஏ. நிஷார் ஷரீஃப், கலை இயக்குனர் என்.கே.ராகுல், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் காசி, ஆடை வடிவமைப்பாளர் நந்தினி நெடுமாறன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள்.

ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். ஆனால், பின்னணி இசை வழியே நம்மைச் சிரித்து மகிழ வைத்திருக்கிறார். அது இப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம்.

Housemates Movie Review 2025

நாயகி அர்ஷா அழகாக இருக்கிறார். அவரது கண்கள் நம்மை ஈர்க்கின்றன. அந்த அளவுக்கு நடிப்பு சட்டென்று ஈர்ப்பதாக இல்லை.

அது தர்ஷனுக்கும் பொருந்தும். அவர் அழகாகத் திரையில் தெரிகிற அளவுக்கு நடிப்பைத் தரவில்லை. அவர் ‘டல்’லாக இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதனை ‘கவர்’ செய்யும்விதமாக, அப்பாத்திரத்தின் பின்னணியில் ஏதேனும் சில விஷயங்களைச் சேர்த்திருக்கலாம்.

காளி வெங்கட் – வினோதினி மற்றும் அவர்களது மகனாக நடித்த கென்ரிக் மூவரும் திரையில் நம்மை சிரிக்க வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் அழவும் வைத்திருக்கின்றனர். அதுவே அவர்களது நடிப்பின் சிறப்பைச் சொல்லிவிடும்.

இந்தப் படத்தில் கவிதா பாரதி, தீனா, ஜீவா ரவி, அப்துல் லீ உட்படச் சிலர் நடித்துள்ளனர்.

திரைக்கதையின் மையச்சரடாக உள்ள, அப்துல் லீ பாத்திரம் விளக்குகிற  ‘டெசராக்ட் தியரி’ (tesseract theory) இன்னும் எளிமையாகச் சொல்லப்பட்டிருந்தால், இப்படம் நமக்கு இன்னும் நெருக்கமானதாக மாறியிருக்கும். கதை மாந்தர்களோடு சேர்ந்து நாமும் அந்த வீட்டில் ஒருவராக வசிக்கிற உணர்வு ஏற்பட்டிருக்கும்.

2000ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் ‘ப்ரிக்யூன்சி’ (Frequency) என்றொரு படம் வந்தது. அதுவும் இதே போன்றதொரு ‘சயன்ஸ் பிக்‌ஷன் – பேண்டஸி’ கதைதான்.

அப்படத்தின் தொடக்கத்தில் முதன்மை பாத்திரங்கள் என்ன நிலையில் இருந்தனவோ, அதற்கு நேர்மாறாக அவை கிளைமேக்ஸில் காட்டப்படும். அதாகப்பட்டது, கதையில் நிகழும் அந்த ஒரு விஷயம் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மெதுமெதுவாக மாற்றுவது திரைக்கதையில் படிப்படியாகச் சொல்லப்படும்.

அது போன்றதொரு திரையனுபவம் ‘ஹவுஸ்மேட்ஸ்’ஸில் கிடைத்திருந்தால், தமிழில் குறிப்பிடத்தக்க அறிவியல் புனைவாக இது மாறியிருக்கும். அந்த அந்தஸ்தை இப்படம் பெறாதது வருத்தம் தரும் விஷயம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share