பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் கவின் செல்வகணேஷ். இவர் சுபாஷினி என்ற வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐடி ஊழியரான கவின் கடந்த 27ம்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். மேலும் சுபாஷியின் பெற்றோர் சரவணன் – கிருஷ்ணகுமாரி இருவரும் சப் இன்ஸ்பெக்டராக இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 நாள் போராட்டத்திற்கு பிறகு கவின் பெற்றோர் உடலை வாங்கி இறுதிச்சடங்குளை செய்து முடித்தனர்.

கவினின் தந்தை சந்திரசேகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தூத்துக்குடி காவல்துறை சார்பில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கவின் பெற்றோரிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கவின் வழக்கில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெற்றோருக்கு முதல்வர் உறுதி அறித்துள்ளார்.