குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைப்பது வழக்கம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், முதியவர்கள் குளிர்காலத்தில் அதிகம் அவதிப்படுகிறார்கள். சளித் தொல்லை , மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி என பல்வேறு வடிவங்களில் சளி நம்மை அவதிக்கு உள்ளாக்குகிறது. சில சமயங்களில் சளிப் பிரச்னை சுவாசிப்பதிலும் சிரமத்தை உண்டாக்கும். இரவில் தூங்கும்போது கூட சளி, இருமல் நமக்கு தொல்லை தரும்.
தொடர்ந்து சளி, இருமல் பிரச்னை வரும்போது நாம் அடிக்கடி மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, வீட்டு வைத்தியம் போல இயற்கையாக நம் வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்தே சளித் தொல்லைக்கு நிவாரணம் பெறலாம். வீட்டு வைத்தியத்திற்கு குறைந்த செலவே ஆவதோடு பக்க விளைவுகளே இல்லாமல் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அத்துடன், அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. சளி, இருமலை குணப்படுத்தும் கஷாயத்தை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ஒரு சிறிய இஞ்சி
- ஒரு கப் துளசி இலைகள்
- சிட்டோபலாடி பவுடர் – 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு தூள் -1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- தேன் – 2 தேக்கரண்டி
செய்முறை: முதலில், இஞ்சியை லேசான சூட்டில் வறுக்க வேண்டும். ஏனெனில் வறுத்து பயன்படுத்தும்போது இஞ்சியின் வெப்பமயமாதல் பண்புகள் காரணமாக இருமல், சளியை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனையடுத்து இஞ்சி மற்றும் துளசி இலைகளை ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அல்லது துணியை பயன்படுத்தி சாற்றைப் பிரித்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் சிட்டோபலாடி தூள், கருப்பு மிளகு தூள், மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்க வேண்டும். இதற்கு பிறகு அதனை நீங்கள் குடிக்கலாம்.
இந்த இருமல் கஷாயத்தை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை குடித்தால் சளி, இருமலில் இருந்து விடுபட நல்ல தீர்வைக் கொடுக்கும். இந்த கஷாயத்தை 2 முதல் 3 நாட்கள் வரை ப்ரிட்ஜில் சேமித்து வைக்கலாம். அதே சமயம் இது சிகிச்சை முறை அல்ல, உங்களுக்கு தீவிரமான இருமல், சளி இருக்கும்போது நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
