தலைவலியில் இருந்து உடனடியாக நம்மை விடுவிக்கும் வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இப்போது நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கை மிகவும் மன அழுத்தமாகவே உள்ளது. இதனால் பலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படக்கூடும். பலர் தொடர்ச்சியான ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைவலி ஏற்படுவதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் தூக்கமின்மை, கண் சோர்வு, நீரிழப்பு, வானிலை மாற்றம் அல்லது வாயு காரணமாக கூட தலைவலி வரலாம். பலர் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். இருப்பினும், வீட்டு வைத்தியங்கள் (Home Remedies) மூலம் தலைவலியிலிருந்து எளிதில் விடைபெறலாம்.
தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும் : தலைவலி ஏற்பட நீரிழப்பு ஒரு பொதுவான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது மூளையைச் சுற்றியுள்ள திசுக்கள் சுருங்கி வலியை ஏற்படுத்துகிறது. ஆகவே, நாள் முழுவதும் 8 முதல் 10 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். தலைவலி தொடங்கியதும் உடனடியாக 1-2 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நிவாரணம் அளிக்கும்.
இஞ்சி, துளசி சாறு : துளசி இலைகள், இஞ்சி சாற்றில் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 5-6 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது துளசி மற்றும் இஞ்சி சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து தலைவலியைக் குறைக்கிறது.
ஒத்தடம் கொடுக்கலாம் : குளிர் அல்லது சூடாக ஒத்தடம் கொடுப்பது தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. குளிர் ஒத்தடம் கொடுப்பது நரம்புகளில் வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கின்றன. கால்களை வெதுவெதுப்பான நீரில் நனைப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நெற்றி, கழுத்து மற்றும் உச்சந்தலையில் வெதுவெதுப்பான எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்வதும் தலைவலியை விரைவாகப் போக்க உதவுகிறது.
காபி, டீ அருந்தலாம் : சில சமயங்களில் காஃபின் இரத்த நாளங்களை சற்று கட்டுப்படுத்தாக கூறப்படுவதால் அது தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கலாம். உங்கள் காஃபின் அளவை சரிசெய்ய காபி, தேநீர் குடிக்கலாம். ஆனால், அதிகப்படியான காஃபின் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம் தலைவலியைத் தடுக்க உதவும். மன அழுத்தம் மற்றும் சோர்வு தலைவலியை மோசமாக்கும், எனவே வலி தொடங்கும் போது, கண்களை மூடிக்கொண்டு அமைதியான இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுங்கள். சில நேரங்களில் வயிற்று வாயு அல்லது அஜீரணத்தால் தலைவலி ஏற்படுகிறது. தொடர்ந்து மோர் குடிப்பது, லேசான உணவு உட்கொள்வது மற்றும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நிவாரணம் அளிக்கும். எனினும், தலைவலி மீண்டும் மீண்டும் வந்தால் அல்லது நீண்ட நேரம் நீடித்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம்.
