இடைக்கால பட்ஜெட் : உள், மதுவிலக்கு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

Published On:

| By Kavi

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறைக்கு ரூ. 15,111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு

ADVERTISEMENT

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினை வலுப்படுத்தும் வகையில், கடந்த ஐந்தாண்டுகளில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 11,777 இரண்டாம் நிலை ஆண் காவலர்கள், 4,482 இரண்டாம் நிலை பெண் காவலர்கள், 839 ஆண் காவல் சார்பு ஆய்வாளர்கள், 220 பெண் காவல் சார்பு ஆய்வாளர்கள் என மொத்தம் 17,318 நபர்கள் காவல்துறைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2 புதிய காவல் ஆணையரகங்கள், 3 புதிய காவல் மாவட்டங்கள், 6 புதிய காவல் உட்கோட்டங்கள் மற்றும் 81 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், தீவிரவாத தடுப்புக் குழு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், சுற்றுக்காவல், போக்குவரத்து மேலாண்மை மற்றும் இதர காவல் பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,063 வாகனங்கள் 259 கோடி ரூபாய் செலவில் காவல்துறை பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை பணக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் வற்புறுத்தல் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் (வற்புறுத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025 இயற்றப்பட்டு, இதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளாதாரக் குற்றங்களை, 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கொண்டு வர 2025 ஆம் ஆண்டு உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் சிறார்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் 43 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 80 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு, பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடைசெய்கின்ற (திருத்தச்) சட்டத்தை இந்த அரசு இயற்றியுள்ளது. இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதன் விழிப்புணர்விற்காக பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்திற்கு ஒரு இயக்க மேலாண்மை அலகு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தீயணைப்புத் துறை

‘காக்கும் பணி எங்கள் பணி’ என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கிவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, கடந்த ஐந்தாண்டுகளில் 1,10,836 தீவிபத்து அழைப்புகளிலும், 4,50,832 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி, 52,837 மனித உயிர்களையும், 2,898 கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், 281 கோடி ரூபாய் மதிப்பிலான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்புக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில், 39 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்காக 213 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. 37 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதுடன், 9 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களின் பயிற்சியினை மேம்படுத்தும் விதமாக, மாநில பயிற்சிக் கழகத்தை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள்!

சிறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதில், இந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்பவும், சிறைவாசிகள் நலனைக் கருத்திற்கொண்டும், தற்போது கோயம்புத்தூரில் இயங்கி வரும் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையினை 327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடமாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று, மதுரை மத்திய சிறைச்சாலையை மாற்று இடத்தில் புதியதாக அமைப்பதற்கு 229 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு 15,111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share