கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்படுவதால் தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 1,05,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளம் (Cauvery Hogenakkal Flood) சீறிப்பாய்ந்து ஓடுகிறது.
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா, கேரளாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறான கபினி ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து இரு அணைகளும் நிரம்பிவிட்டன.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,00,000 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் திறந்துவிடப்படும் காவிரி நீர், பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தின் ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கல்லில் இன்று ஜூலை 28-ந் தேதி காலை நிலவரப்படி வினாடிக்கு 1,05,000 கன அடி நீர் வரத்து உள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவியை மூழ்கடித்தபடி காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க, பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் பெரு வெள்ளத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து நேற்று ஜூலை 27-ந் தேதி மாலை 6 மணிக்கு 1,00.000-க்கும் அதிகமான கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.