”ரூபாய் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்தியை ஏற்கமாட்டோம்; மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என்பதில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “சேனை ஒன்று தேவை… செந்தமிழை காப்பதற்கு பெரும் சேனை ஒன்று தேவை” என்று தமிழை காக்க முழக்கம் கேட்டதும், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே!” என்று வீதிகளில் இறங்கி போராடி, தன்னுடைய உயிரையும் தந்து தாய் தமிழைக் காத்து நாம் எல்லோரும் இன்னும் தமிழராய் தன்மான உணர்வோடு தலைநிமிர்ந்த நடைபோட காரணமான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மொழிப்போர் வீரர்களே!
திராவிட இயக்க தீரர்களே… நீங்கள் உருவாக்கி கொடுத்த மண்ணில்தான் நாங்கள் வாழ்கிறோம். மொழிப்போர் வீரர்களே, உங்கள் மூச்சு காற்று தான் இப்போதும் எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் தியாக பிள்ளைகளே, தமிழ்ப் பிள்ளைகளே உங்களை வணங்குகிறேன்.
அண்ணா ஜோதி ஓட்டம்
என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்துசக்திகள் இருந்தாலும், காஞ்சிபுரமே அதன் சிகரமாகத் திகழ்ந்தது.1971-ல் அண்ணா நினைவிடத்தில் இருந்து ‘அண்ணா ஜோதி’ ஏந்தி வந்து, காஞ்சி கழக மாநாட்டு மேடையில் கலைஞரிடம் ஒப்படைத்த அந்த ஓட்டம் இன்றும் ஓயவில்லை.
வரலாற்றில் பல தலைவர்கள் இருந்தாலும், பெரியாரைப் போன்ற குருவும், கலைஞரைப் போன்ற சீடனும் கிடைத்த ஒரே தலைவர் அண்ணா என்பதால் அவர் மீது எனக்கு பொறாமை. இந்தத் தாய்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் அண்ணா.
ஆண்டுதோறும் ஜன.25-ம் நாளை மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில் வீர வணக்க நாளாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். இன்று தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நான் நம்மை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவை தந்த காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
1938 முதல் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி வருகிறோம். இந்தி திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு.
எப்படியாவது இந்தியை நம் மீது திணிக்க ஒரு கும்பல் துடியாய் துடிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை கொண்டுவந்து அதற்கான முயற்சியிலே ஈடுபடுவது இந்தியை திணிக்கத்தான். நேரடியாக திணிக்க முடியாமல் பள்ளி, பல்கலைக்கழகம் மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.
இந்தியாவில் இந்தி ஆதிக்கத்தால் பல மொழிகள் பலியாகியுள்ளன. ஆனால், தமிழை முன்னிறுத்தி ஆங்கிலத்தைத் தொடர்ந்ததால் தமிழ்நாடு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் குறிப்பிட்டு நான் எழுதிய கடிதம் இந்திய அளவில் வரவேற்பு பெற்றது.
ரூ10,000 கோடி கொடுத்தாலும்..
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்.கே.ஜி பையன் பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போல் மொழிப்பாடம் எடுக்கிறார். 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்தியை ஏற்கமாட்டோம்; மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என்பதில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறேன்.
மறந்து போய்விட்டதா மோடி?
பிரதமர் அவர்களே… கடந்த நாடாளுமன்ற தேர்தல் நினைவிருக்கிறதா? உங்கள் கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நீங்கள் எத்தனை முறை வந்து பிரச்சாரம் செய்தீர்கள். அதற்கு பரிசாக முழுமையான தோல்வியை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தது மறந்துபோய்விட்டதா?
2019-லிருந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தவிர, எதுவும் காணாத மாவீரர், Failure கும்பலுடன் சேர்ந்து, கொள்கையால் இணைத்திருக்கக் கூடிய திமுக கூட்டணியை வீழ்த்த போகிறார்களாம்! இதை எப்படி பிரதமர் மோடியால் சிரிக்காமல் சொல்ல முடிகிறது?
டபுள் எஞ்ஜின் -டப்பா எஞ்ஜின்
வட மாநிலங்களை ஏமாற்றும் ‘டபுள் எஞ்ஜின்’ அரசு, தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. துரோகிகள், அடிமைகளை வைத்து தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது.
டபுள் எஞ்ஜின்னு சொல்லி வடமாநில மக்களை ஏமாற்றி, அவங்க வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்க டப்பா எஞ்ஜின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது.
பழைய வடைகளையே சுடும் மோடி
2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளாமல், மறுபடியும் கொத்தடிமைக் கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு போயிருக்கிறார்.. இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டு பக்கம் எதிர்பார்க்கலாம். தேர்தல் சீசன் வந்துட்டா போதும்.. தமிழ்நாட்டுக்கு வந்து பல வெரைட்டில வடைகளை சுடுவது வழக்கம். இந்த முறையும் மோடி வந்தார்..வழக்கமான பழைய வடைகளைத்தான் சுட்டுவிட்டுப் போயிருக்கிறார் மோடி. அந்த மாவும் புளிச்சுபோச்சு. அதை கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்கள் காதும் புளிச்சு போச்சு.
கேள்விக்கு என்ன பதில்?
பிரதமர் வருகிறார் என்றதும் நான் சில கேள்விகளை கேட்டிருந்தேன்.. இந்த கேள்விகள் எதற்குமே பிரதமர் மோடி பதில் தரவில்லை. பதில் இருந்தால்தானே சொல்வதற்கு..
ஆனால், தேர்தல் குறித்த தனது கற்பனைகளை மோடி பேசியிருக்கிறார்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்; உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்து மறைந்த மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
