மத்திய பட்ஜெட்டில் High-Speed Rail Corridors திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் சேவைகள் மூலமாக சென்னை- பெங்களூரு இடையேயான பயண நேரம் 1.13 மணி நேரமாக மட்டும் இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள
ரூ.2,78,000 கோடி என்ற கணிசமான நிதி ஒதுக்கீட்டின் ஆதரவுடன், ரயில்வே தனது செலவினங்களை அதிவேக இணைப்பு, சரக்கு போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
2026-27 மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு
ரூ.2,93,030 கோடி என்ற சாதனை மூலதனச் செலவு திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய ரயில்வேக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச மூலதனச் செலவு மற்றும் நிதி ஒதுக்கீடு.
நீண்ட கால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை மேம்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த வழித்தடங்களில் மும்பை–புனே, புனே–ஹைதராபாத், ஹைதராபாத்–பெங்களூரு, ஹைதராபாத்–சென்னை, சென்னை–பெங்களூரு, தில்லி–வாரணாசி, வாரணாசி–சிலிகுரி ஆகியவை அடங்கும். முன்மொழியப்பட்ட இந்த வழித்தடங்கள் நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, பயணிகளின் தடையற்ற, பலதரப்பட்ட போக்குவரத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், தென்னிந்தியாவில், சென்னை–பெங்களூரு–ஹைதராபாத் அதிவேக ரயில் போக்குவரத்து கட்டமைப்பு முக்கிய பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களை இணைக்கும்.
இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று கூறிய அவர், சென்னை–பெங்களூரு பயணத்திற்கு சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள், பெங்களூரு–ஹைதராபாத் பயணத்திற்கு சுமார் 2 மணி நேரம், சென்னை–ஹைதராபாத் பயணத்திற்கு சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும், இது, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஒரு சக்திவாய்ந்த வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு, பிராந்திய வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்கும். இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
