மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மருத்துவர் ராமதாஸ் மனு தள்ளுபடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Ramadoss PMK

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை இன்று (பிப்ரவரி 20) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாம்பழம் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் புதிதாக மேலும் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

ஒரு மனுவில், “பா.ம.க. தலைவராக நான் உள்ளேன். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, உள்கட்சித் தேர்தல் நடத்தி தலைவராகத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக் கடிதத்தை அனுப்பினால் அதைப் பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தலைவராகப் பதிவு செய்யும் படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது” என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு மனுவில், “பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால் கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த 2 வழக்குகளும் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துவிட்டு அதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை இதுபோல் வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.மேலும், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஏற்கனவே தேர்தல் ஆணையம், பா.ம.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று உரிய விளக்கத்தைக் கொடுத்துவிட்டது. அதைச் சுட்டிக்காட்டி, ராமதாஸ் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், இது தொடர்பான விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share