“வருவாயை பங்கு போடத்தான் கூட்டம் நடத்துகிறார்கள்”: கனிம வள அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்!

Published On:

| By Kavi

கனிமவள அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் வருவாயை பிரித்துக் கொள்வதற்காகத்தான் கூட்டம் நடத்துகிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில், ‘ நான் மாற்றத்திறனாளி. 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட சுரங்க துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளை கணக்காளராக தற்காலிக பணியில் சேர்ந்தேன். 

2022 ஆம் ஆண்டு இந்தத் துறையின் உதவி இயக்குனராக மாரியம்மாள் பொறுப்பேற்றார். 

ADVERTISEMENT

அவர் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்ய வேண்டும் அதற்கு ஊதியம் தருகிறேன் என்று கூறினார். 

அதன் பேரில் நான் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப் பணத்தை வாரத்துக்கு ஒரு முறை எடுத்து மாரியம்மாளிடம் கொடுத்து விடுவேன். 

ADVERTISEMENT

ஆனால் நான் பல்வேறு முறைகேடு செய்ததாக என் மீது மாரியம்மாள் குற்றம்சாட்டினார். 

அவரது தூண்டுதலின் பேரில் குவாரி உரிமையாளர்கள், கொடுத்த லஞ்ச பணத்தை என்னிடம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இதனால் நானும் எனது தாயாரும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறோம். 

லஞ்ச பணத்தை குவாரி உரிமையாளர்களிடமிருந்து மாரியம்மாள் வங்கி கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. 

எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதால் எனக்கும் எனது தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 11) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில், “உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரி உரிமையாளர்களிடமிருந்து மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் புனையப்பட்டவை” என்று வாதிடப்பட்டது. 

மனுதாரர் சார்பில், “உதவி இயக்குனர் மாரியம்மாள் லஞ்சவழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். அங்கிருந்து சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன. மாரியம்மாள் லஞ்சம் வாங்கியதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. 

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது. அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத்தான் கனிமவள  அதிகாரிகள் கூட்டம் நடத்துகின்றனர். 

இதுபோன்ற தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்குபோட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. 

தமிழகம் முழுவதும் இதேநிலை தான் இருக்கிறது. 

எனவே மனுதாரர் வங்கி கணக்கில் வாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினார்கள். அந்த பணம் மூலம் யார் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள் என்று அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரிவாகவும் நேர்மையாகவும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

தவறினால் இந்த விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற நேரிடும். நேர்மையாக விசாரித்தால் மட்டுமே இந்த துறையில் நல்லது நடப்பதற்கு உதவ முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் தேடித் தர முடியும்” என்று கூறி வழக்கு விசாரணையை 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share