கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி 3 வழக்குகளும், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தொடங்கப்பட்ட முன்ஜாமின் மனுக்கள், ஆதர்வ் அர்ஜூனா மனு உள்ளிட்ட 9 வழக்குகள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜோதிராமன் மற்றும் தண்டபானி, ‘அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த வித பொதுக் கூட்டங்களையும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த கூடாது என்ற உத்தரவிட்டனர். பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மட்டும்தான் அனுமதி வழங்க வேண்டும் என்றும், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே பொது கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து மனுவை முடித்து வைத்தது.
இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் விஜய் மற்றும் அரசு தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணையின் போது நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.