ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சைக்குரிய எக்ஸ் பதிவு விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து நேபாளம், வங்கதேசம் போன்று புரட்சி தான் ஒரே வழி தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். கடும் எதிர்ப்பை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் அந்த பதிவை நீக்கி விட்டார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 3) கரூர் சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் பதிவு குறித்த காட்டமான கருத்துகளை நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன வார்த்தையே கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்த நிலையில் ஒரு புரட்சி ஏற்படுவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற பொறுப்பற்ற பதிவுகளை கவனமாக கையாண்டு காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள். இவை அனைத்தையும் நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.