அரசு ஏன் டாஸ்மாக் கடையை நடத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. High Court asked why government running TASMAC
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேகலா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், ” மதுரை கைத்தறி நகரில் புதிதாக மதுபான கடை திறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் , மரியா கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. அரசின் கொள்கைகள் முரணாக உள்ளன.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு டாஸ்மாக் விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
முந்தைய காலங்களில் திரைப்படங்களில் வன்முறை, மது உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு போன்ற காட்சிகள் இடம்பெறாது. ஆனால் இன்றைய திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் இல்லாமல் படம் எடுப்பதில்லை.
அரசு டாஸ்மாக் கடையை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? அது என்ன அரசு பணியா?
அரசு நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளது. டாஸ்மாக் கடையை ஏன் அரசு நடத்த வேண்டும்?
டாஸ்மாக், ஆன்லைன் ரம்மி இரண்டுமே மக்களை கொலை செய்பவை தான்.
மது, ஊழல் சட்டவிரோதம் போன்ற குற்றச்சம்பவங்கள் பலவற்றுக்கும் காரணமாக அமைகிறது. அரசின் நிலைப்பாடு தான் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு சார்பில், மது அருந்துவதை அரசு ஊக்குவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள் மது அருந்துவதை ஊக்குவிக்கவில்லை எனில் எதற்காக விற்பனை செய்கிறீர்கள்.
மது கடைகள் மூடப்படும் என்று ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அறிவிக்கிறார்களே தவிர அதை செய்வதில்லையே?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பில் மதுக்கடைகளின் எண்ணிக்கை இனி அதிகரிக்கப்படாது. படிப்படியாக கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “அப்படி என்றால் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியவாறு இருக்கலாமே… எதற்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்கிறீர்கள்.
அரசு என்பது வேலைவாய்ப்பு கல்வி பொதுநலன் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் ” என்று குறிப்பிட்டனர்.
தொடர்ந்து அரசு தரப்பில் எழுதுப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். High Court asked why government running TASMAC