தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் ரயில் டிக்கெட் புக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 16ந் தேதிக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கிய சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் மக்கள் கடைசி நேர பதற்றதை தவிர்க்க முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் அக்டோபர் 16ந் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்நிலையில் வரும் அக்டோபர் 17ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்டோபர் 18 ந்தேதிக்கான முன்பதிவு நாளை மறு நாளும் தொடங்கும். அக்டோபர் 19ம் தேதிக்கான முன்பதிவு வரும் 20 தேதி தொடங்கும். தீபாவளி நாளான 20ம் தேதிக்கான முன் பதிவு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கோவை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் ரயில் டிக்கெட் புக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போதைய சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்படுகின்றன. சென்னையிலிருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 2000க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு சுமார் ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விமான கட்டணங்களும் மும்மடங்கு வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில்தான் பொதுமக்கள் தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.