நம்மில் பலரும் அசைவ உணவுகளை விரும்பி உண்கிறோம். பிரியாணி என்றாலே மட்டன்தான், மட்டன் சுக்காவுக்கு ஈடு இணையில்லை என ரசித்து உண்பவர்கள் அதிகம்.
மேலும், சிலர் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளை விரும்புகின்றனர். ஆனால், இப்படி ரசித்து உண்ணும் சிவப்பு இறைச்சி நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், நாம் விரும்பி உண்ணும் சிவப்பு இறைச்சி குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம் என சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
Molecular Nutrition & Food Research இதழில் வெளியான இந்த ஆய்வு, (DOI: 10.1002/mnfr.70203) பன்றி, மாடு மற்றும் ஆட்டு இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி நிறைந்த உணவு குடல் அழற்சி நோய்களை (Inflammatory Bowel Disease – IBD) தூண்டி, ஆரோக்கியத்தை பாதிக்கலாம் எனக் கூறுகிறது.
ஆய்வு முடிவு சொல்வது என்ன
சீனாவின் கேபிடல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் எலிகளுக்கு சிவப்பு இறைச்சி நிறைந்த உணவு அளிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குடல் அழற்சி நோயை உருவாக்கும் Dextran Sodium Sulfate என்ற இரசாயனம் வழங்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், சிவப்பு இறைச்சி உண்ட எலிகளுக்கு எடை இழப்பு, குடல் நீளம் குறைதல் மற்றும் திசு பாதிப்பு போன்ற கடுமையான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த ஆய்வு குறிப்பிட்ட வகை இறைச்சியை மட்டுமல்ல, அனைத்து சிவப்பு இறைச்சிகளையும் பொதுவாக ஆராய்ந்தது.
மேலும், சிவப்பு இறைச்சி உண்ட எலிகளில் நோயெதிர்ப்பு அமைப்பு அதிகப்படியாக செயல்பட்டு, குடலில் அழற்சி செல்கள் அதிகரித்தன. சிவப்பு இறைச்சி, குடலில் ஏற்கனவே உள்ள அழற்சி சமிக்ஞைகளை மேலும் தீவிரமாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சிவப்பு இறைச்சி குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.குடல் நுண்ணுயிரிகள் செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமானவை. ஆனால், சிவப்பு இறைச்சி உண்ட எலிகளில், குடல் பாதுகாப்பு மற்றும் அழற்சியைக் குறைக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குறைந்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரித்தன.
இதனால், ஏற்கனவே உள்ள நோய்கள் மோசமடைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆய்வு, சிவப்பு இறைச்சி நிறைந்த உணவு குடல் அழற்சியை மோசமாக்கலாம் என்பதை எலி மாதிரியில் காட்டுகிறது. இது மனிதர்களுக்கு முழுமையாக பொருந்துமா என்பது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ள தேவை உள்ளது.
மிதமான சிவப்பு இறைச்சி நல்லது
இருப்பினும், கிரோன் நோய் (Crohn’s Disease) மற்றும் அல்சரேட்டிவ் கோலிடிஸ் (Ulcerative colitis) போன்ற குடல் அழற்சி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு இறைச்சி உட்கொண்ட பிறகு அறிகுறிகள் தீவிரமாவதாக புகார் கூறுவதற்கு இந்த ஆய்வு விளக்கம் அளிக்கிறது.இந்த ஆய்வு எலிகளில் நடத்தப்பட்டதால், மனிதர்களுக்கு இது முழுமையாக பொருந்தும் என உறுதியாகக் கூற முடியாது. மேலும், சிவப்பு இறைச்சியை முற்றிலும் நிறுத்துவது குடல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என ஆய்வு திட்டவட்டமாகக் கூறவில்லை.
இருப்பினும், சிவப்பு இறைச்சியைக் குறைத்து, நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி உணவுத் திட்டத்தை அமைத்துக்கொள்வது முக்கியம்.