இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டின் முதுபெரும் நடிகர் தர்மேந்திரா Bollywood Actor Dharmendra உடல்நிலை குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டதாக அவரது மனைவி ஹேமமாலி மற்றும் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் தர்மேந்திரா. 1960-ம் ஆண்டு தில் பீ தேரா ஹம் பீ தேரே திரைப்படம் மூலம் திரை உலகில் கால் பதித்தார் தர்மேந்திரா. 6- ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் உச்சநடிகராக கோலோச்சியவர் தர்மேந்திரா. ‘ஷோலே’, ‘சீதா அவுர் கீதா’, ‘தும் ஹசீன் மெயின் ஜவான்’ உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர்.
- 1997 இல் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
- 2012- நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றார்.
19 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட தர்மேந்திராவின் வாரிசுகள்தான் திரை நட்சத்திரங்களான சன்னி தியோல், பாபி தியோல். பின்னர் நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2018-ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்தார் தர்மேந்திரா. 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்பியானார் தர்மேந்திரா.

அண்மைக்காலமாக வயது மூப்பால் தர்மேந்திரா, உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தர்மேந்திரா இன்று காலமானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின; மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது இந்த தகவலை தர்மேந்திரா மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தர்மேந்திரா மனைவி ஹேமமாலினி, இப்படி ஒரு தவறான தகவலை வெளியிட்ட ஊடகங்களை மன்னிக்க முடியாது என கூறியுள்ளார். தர்மேந்திரா மகள் EshaDeol, தந்தையின் உடல நிலை முன்னேறி வருகிறது; அவர் மறைந்துவிட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என கூறியுள்ளார்.
