திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நேற்று இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தாலும் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் நீடித்தது.
திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நேற்று மார்ச் 9-ந் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்காக சுமார் 50,000 வாகனங்களில் திமுக நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். 200 ஏக்கரில் இதற்காக தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.
திமுகவின் இந்த மாநாடு இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தது. இதனையடுத்து மாநாட்டுக்கு வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர்.
இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கே 3 மணிநேரத்துக்கும் மேலானது.
எங்கெங்கே மாற்று பாதைகள் தென்படுகிறதோ அந்த பகுதிகளிலும் வாகனங்கள் நுழைந்தன.. இதனால் நள்ளிரவைத் தாண்டியும் குக்கிராமங்களிலும் கூட வாகனங்கள் பல மணிநேரம் காத்து கிடந்தன.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அத்தனை ஆயிரம் வாகனங்கள் காத்திருந்தும் போலீசார் களமிறங்கி அதனை ஒழுங்குபடுத்த முன்வரவில்லை. ஆளும் கட்சியினரை போலீசாரே கைவிட்டதாக குமுறி திமுகவினரே பல இடங்களில் ஆத்திரத்துடன் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய களமிறங்கினர்.
இது தொடர்பாக திமுகவினர் கூறுகையில், “விஜய் கூட்டம் நடக்கும் போது மொத்த போலீஸும் இறங்கி கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என மும்முரமாக இருக்கின்றனர்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற ஆளும் கட்சி மாநாட்டுக்கு வந்துவிட்டு வாகனங்கள் திரும்பும் போது அதை ஒழுங்குபடுத்த போலீசார் முன்வரவில்லையே” என ஆதங்கப்பட்டனர்.
