கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 12 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் ராஜாஜி நகர், முல்லை நகர், பழைய பேட்டை போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக ராஜாஜி நகர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் முழங்கால் வரை புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட்ள்ளனர்.
இந்தநிலையில் கனமழையால் ஓசூர் பார்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அரசு கல்லூரி மாணவர் சுரேஷ் (வயது 19) என்பவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த மருத்துவமனையில் ஒருபகுதி சுவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சாலைப்பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த நிலையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் சுற்றுச்சுவரின் மீதி எஞ்சிய பகுதியும் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
இதே போன்று ஓசூர் பஸ் நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, கிருஷ்ணகிரி-ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.