தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் 3 நாட்களுக்குக் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் எனவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆணையருமான சிஜி தாமஸ் வைத்யன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆகஸ்ட் 4ம் தேதி மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஆகஸ்ட் 5 ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனால் பேரிடர் ஏற்பட்டால் அதைக் கையாள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக ஏற்படும் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை செய்து தயார்நிலையில் வைத்திருக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதீத மழை மற்றும் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட்டில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.