சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 30) கொட்டித் தீர்த்த கனமழையால் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 8 விமானங்கள் வானிலேயே வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகரில் நேற்று இரவு திடீரென பெருமழை கொட்டியது. மேகவெடிப்பைப் போல இடைவிடாமல் 1 மணிநேரத்துக்கும் அதிகமாக கனமழை பெய்தது. சென்னை மணலியில் மட்டும் 1 மணிநேரத்தில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 1 மணிநேரத்துக்குள் 10 செ.மீ-க்கும் அதிகமான மழை பெய்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 12 விமானங்களும் தாமதமாகின. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. நள்ளிரவில் 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தின் மேல் வானிலேயே வட்டமடித்து தாமதமாக தரை இறங்கின.
சென்னை விமான நிலையத்தில் இலங்கை, துபாய், குவைத், சிங்கப்பூர் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.