தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 7) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்றிரவு தருமபுரி, அரியலூர், கரூர்,மயிலாடுதுறை உட்பட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில், மணலி, நெற்குன்றம், கொரட்டூர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம், விம்கோ நகர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதில், மணலி புதுநகரில் அதிகபட்சமாக 9.2 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம் தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.