சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை (செப்டம்பர் 16) முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை சைதாப்பேட்டையில் 12 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 21-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானில் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்தெடுத்தது. இந்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து பாய்ந்தோடியது.
சென்னை புறநகர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும் 2 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது.
சென்னையில் அதிகபட்சமாக சைதாப்பேட்டையில் 12 செ.மீ , மயிலாப்பூரில் 8 செ.மீ. மழை பெய்தது. அயனாவரத்தில் 7 செ.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார் பேட்டையில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
10 விமானங்கள் தாமதம்
சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 317 பயணிகளுடன் தோஹாவில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.