டிசம்பர் 31 இரவு என்றாலே பாட்டில் திறக்கப்பட வேண்டும், விடிய விடிய ஆட்டம் போட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. “இன்னைக்கு ஒரு நாள் தானே…” என்று நண்பர்கள் கட்டாயப்படுத்துவார்கள். ஆனால், அந்த ஒரு நாள் கொண்டாட்டம், அடுத்த நாள் காலையை எப்படி மாற்றுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா?
கண் விழிக்கும்போதே தாங்க முடியாத தலைவலி (Hangover), உடல் சோர்வு, வாந்தி உணர்வு… இப்படியா ஒரு புத்தாண்டை வரவேற்பது? முதல் நாளே சோம்பேறித்தனத்துடனும், நோயுடனும் தொடங்கினால், அந்த வருடம் முழுவதும் நம் மனநிலை எப்படி இருக்கும்?
இந்த முறை அந்தப் பழக்கத்தை உடைப்போம். ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை முன்னெடுப்போம்.
1. சூரியனோடு போட்டி போடுங்கள்: டிசம்பர் 31 இரவு 10 மணிக்கே படுத்துவிடுங்கள். ஜனவரி 1 அன்று காலை 5:30 மணிக்கு எழுந்து பாருங்கள். ஊரே போதையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் ராஜாவாகத் துள்ளி எழுவீர்கள்.
- கடற்கரை நடைப்பயிற்சி: உங்கள் ஊரில் கடற்கரையோ, பூங்காவோ இருந்தால் அங்குச் செல்லுங்கள். வருடத்தின் முதல் சூரிய உதயத்தைப் பார்ப்பது, உடலுக்கு வைட்டமின்-டியையும், மனதிற்குப் பேரானந்தத்தையும் தரும். அந்தச் சுத்தமான காற்று (Oxygen) உங்கள் நுரையீரலுக்குக் கிடைக்கும் முதல் பரிசு.
2. யோகா- ஒரு மந்திரத் திறவுகோல்: ஜிம்முக்குச் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே ஒரு பாயை விரித்து, 12 முறை ‘சூரிய நமஸ்காரம்’ செய்யுங்கள். உடலின் அனைத்துத் தசைகளையும் இயக்கும் ஒரே பயிற்சி இதுதான். இது உங்களுக்குத் தரும் புத்துணர்ச்சி, எந்த எனர்ஜி ட்ரிங்கிலும் கிடைக்காது.
3. முதல் உணவு (First Food): முதல் நாள் காலையில் காபி, டீ குப்பதற்குப் பதில், ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அல்லது ஃப்ரெஷ்ஷான பழச்சாறு அருந்துங்கள். “இந்த வருஷம் முழுவதும் என் உடம்பை நான் பத்திரமா பாத்துப்பேன்” என்று உங்கள் உடலுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதி இது.
ஏன் இது முக்கியம்? “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பார்கள். ஆண்டின் முதல் நாளை நாம் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் தொடங்குகிறோமோ, அந்தத் தாக்கம் ஆண்டு முழுவதும் இருக்கும்.
போதை சில மணி நேரம் தான் மகிழ்ச்சியைத் தரும்; ஆனால் ஆரோக்கியம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைத் தரும். இந்த புத்தாண்டில், மதுக்கடைகளைத் தேடிச் செல்வதை விட, மைதானங்களைத் தேடிச் செல்வோம்.
ஆரோக்கியமே உண்மையான கொண்டாட்டம்!
