சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக அபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ”நீர் நிலைகள், வனப்பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மட்டுமே சர்வே எடுக்க வேண்டி உள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் சீமை கருவேல மரங்கள் கணக்கெடுப்பு மற்றும் அகற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கு தமிழக அரசும் அரசாணையும் வெளியிட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் ராக்கெட் சயின்ஸ் உள்ளதா எனக் கேள்வியுடன் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அதன்பின்னர் அதனை அகற்றுவதற்கு நீதிபதிகளே பல்வேறு ஆலோசனைகளை அரசு தரப்புக்குவழங்கியுள்ளனர்.
அதன்படி, ”ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசே அகற்றி அதற்கான செலவு தொகையை நில உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம். சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு நிதி எதுவும் ஒதுக்க அவசியம் இல்லை. மாறாக சீமை கருவேல மரங்களை வெட்டி அதை ஏலம் மூலம் விற்று வருவாய் ஈட்டலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தனியார் நிலங்களில் இருந்து சீமை கருவேல மரங்களை அகற்ற நில உரிமையாளர்கள் அனுமதிக்காவிட்டால் அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும், வடகிழக்கு பருவ மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை காரணம் காட்டி, சீமை கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டமட்டமாக தெரிவித்தனர்.
எனவே தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பான திட்டத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழக அரசு உரிய பதிலை அளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.