கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.26,40,000 ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வழியாக செல்லும் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எல்லை மாகாளி அம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையிலிருந்து கேரளாவிற்கு இரு சக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இரண்டு இளைஞர்கள் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. அவர்களிடம் 26,40,000 பணம் மற்றும் கவரிங் வளையல்கள் இருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக கருத்து தெரிவித்தார். இருவரையும் போலீசார் க.க.சாவடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.