பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 14, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது.
இன்று, ஜனவரி 13, வரை மட்டுமே பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு காரணங்களால் வாங்க முடியாதவர்கள் ஆகியோருக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை ஜனவரி 14, 2026, பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்றும் நாளையும் காலை முதல் மாலை வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 24,924 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 899 அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகையாக ரூ. 6,123.26 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பயனாளிகள் இந்த பரிசு தொகுப்பை பெற தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
