அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்த நிலையில், அதனை ஏற்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பும், ராணுவத்தை திரும்ப பெறுவதாக இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – காசா இடையேயான இரண்டு ஆண்டு கால போரில் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் – காசா போரை நிறுத்தக்கோரி 20 நிபந்தனைகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை வரை கெடு விதித்திருந்தார். அவர் முக்கியமாக, “போர் நிறுத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இதற்கு முன்பு யாரும் கண்டிராத அனைத்து நரகங்களும் ஹமாஸுக்கு எதிராக வெடிக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சில நிபந்தனைகளுக்கு உடன்படுவதாக ஹமாஸ் அமைப்பு நேற்று அறிவித்தது. எனினும் டிரம்ப்பின் சில நிபந்தனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீன தேசிய ஒருமித்த கருத்து மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன் “காசா பகுதியின் நிர்வாகத்தை பாலஸ்தீன சுயாதீன அமைப்பு (தொழில்நுட்ப வல்லுநர்கள்) வசம் ஒப்படைக்க” தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேலுக்கு அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவில், ”ஹமாஸ் நீடித்த அமைதிக்கு தயாராக உள்ளது என்று நம்புவதாகவும், காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துங்கள், இதனால் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை ஏற்று இஸ்ரேலிய அரசாங்கம் காசா நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய இராணுவத்தால் இயக்கப்படும் அரசு நிதியளிக்கப்பட்ட வானொலி வலையமைப்பான ஆர்மி ரேடியோ தெரிவித்துள்ளதாக இராணுவ நிருபர் டோரன் கடோஷ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இஸ்ரேலின் தலைமை, இராணுவத்தின் நடவடிக்கைகளை குறைத்து, காசாவில் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம், காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை இப்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றது தொடர்பாக அதிபர் டிரம்ப் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதில், ”இது ஒரு பெரிய நாள். எல்லாம் எப்படி முடிவடைகிறது என்பதைப் பார்ப்போம். இறுதி வார்த்தையை நாம் உறுதியாகப் பெற வேண்டும்.
மிக முக்கியமாக, பணயக்கைதிகள் தங்கள் வீட்டிற்கு வருவதை காண விரும்புகிறேன். எனவே, இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதை ஒன்றிணைக்க எனக்கு உதவிய நாடுகளான கத்தார், துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் பல நாடுகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பலர் கடுமையாகப் போராடினர். இந்தப் போர் முடிவுக்கு வந்து மத்திய கிழக்கில் அனைவரும் அமைதியைக் காண முடியும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.