தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளராக, நாயக நடிகராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது இசையமைப்பில் ‘இட்லி கடை’ இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகள் பலவற்றில் அவர் பங்கேற்றார். ஊடகங்களின் பேட்டிகளிலும் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், ‘குமுதம்’ இணையதளத்திற்கு முன்னர் அவர் அளித்த பேட்டியொன்று தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில் இயக்குனர் வெற்றிமாறனோடு தான் இத்தனை ஆண்டு காலம் சேர்ந்து பணியாற்றிவரும் பிணைப்பு எத்தகையது என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘அசுரன்’ படத்தின் ‘ஃபுட்டேஜ்’ பார்த்துவிட்டு தான் வெற்றிமாறனிடம் சொன்னதைப் பகிர்ந்திருக்கிறார்.
“அசுரனோட பர்ஸ்ட் புட்டேஜ் வந்தப்போ, கென் கருணாஸ் நடிச்சதை பார்த்தேன். உடனே வெற்றியைக் (வெற்றிமாறன்) கூப்பிட்டு, அவர் கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியா இருக்கார்ன்னு சொன்னேன். அதனால, அவர் பையன் மாதிரி இல்ல. வெயிட்டை குறைக்க வச்சு திரும்ப ஷுட் பண்ண முடியுமான்னு கேட்டேன்.
அப்படி கென் வெயிட் குறைச்சு, ரீஷுட் பண்ணதைத்தான் இப்ப நாம பைனலா பார்க்குறோம். நாம சொல்ற யோசனைகளை, வெற்றி ஏற்றுக்கொள்வார். வடசென்னை, விடுதலை படங்களோட புட்டேஜையும் அவர் என்கிட்ட காண்பித்திருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
அதேபோன்று தானும் ‘நிலவுக்கு என்னடி என் மேல் கோபம்’ படத்தின் பாடல்களை வெளியீட்டுக்கு முன்னர் வெற்றிமாறனிடம் தான் காண்பித்ததாகவும் கூறியிருக்கிறார்.
’இட்லி கடை’ படத்துல இப்படி சொன்ன கரெக்ஷன்களை இன்னும் சில வருஷம் கழிச்சு ஜி.வி.பிரகாஷ் சொல்வாரோ..?!